×

அமலாக்கத்துறை விசாரணைக்கு கலெக்டர்கள் ஆஜராக வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு


புதுடெல்லி: தமிழ்நாட்டில் இருக்கும் மணல் குவாரிகளில் கடந்த ஆண்டு செப்டம்பரில் சோதனை செய்த அமலாக்கத்துறை பத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநில நீர்வளத்துறையின் மூத்த அதிகாரிகள், ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர்கள் உள்ளிட்ட சிலருக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியது. இதையடுத்து அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் ஆகிய ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் தரப்பிலும், அதேப்போன்று தமிழ்நாடு பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் அமலாகத்துறையின் சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்த நிலையில் மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை தரப்பில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எம்.திரிவேதி மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவில், மணல் குவாரி விவகாரத்தில் அமலாக்கத்துறையின் சம்மனுக்கு தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்கிறோம்.

குறிப்பாக சட்டவிரோத பண பரிவர்த்தனையின் கீழ் அமலக்கத்துறை விசாரணை நடத்தி வருவதால், அவர்களின் விசாரணைக்கான ஆதாரம் மற்றும் ஆவணங்களை கேட்க அதிகாரம் உள்ளது. அதன் அடிப்படையில் முன்னதாக அனுப்பப்பட்ட சம்மனுக்கு மதிப்பளித்து மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அடுத்து அனுப்பும் தேதியில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து அப்போது குறுக்கிட்ட தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், ‘‘இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தற்போது தடை விதித்துள்ளதால், சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு காலாவதியாகி ஆகிவிடுமே’’ என்று கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்த நீதிபதி பி.எம்.திரிவேதி, ‘‘உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் உத்தரவு பிறப்பிக்க வேண்டியது தற்போது அவசியமாகும். இருப்பினும் மணல் குவாரி வழக்கு விவகாரத்தை உயர்நீதிமன்றம் தகுதியின் அடிப்படையிலும், அதன் அதிகாரத்தின்படியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என தெரிவித்து, வழக்கு விசாரணையை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்தனர். முன்னதாக கபில் சிபல் வாதிடுகையில், குஜராத்தில் மட்டும் 11000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன. ஒரு எப்.ஐ.ஆர் கூட அங்கு பதிவு செய்யப்படாதது ஏன்’’ என்று கேள்வி எழுப்பினார்.

The post அமலாக்கத்துறை விசாரணைக்கு கலெக்டர்கள் ஆஜராக வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு