வாஷிங்டன்: இருதரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் இஸ்ரேல் – ஹமாஸ் போர் ஒரு வாரத்தில் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நம்பிக்கை தெரிவித்தார். இஸ்ரேல் ராணுவத்திற்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே நடைபெற்று வரும் போரில், அப்பாவி காசா மக்கள் கொல்லப்படுவதையும் பாதிக்கப்படுவதையும் தவிர்க்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் திட்டம் வகுத்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. முன்னதாக இஸ்ரேலின் தாக்குதலால் அப்பாவி மக்கள் பலியாவதை தடுக்க வேண்டும் என்று இஸ்ரேலிடம் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக எகிப்து, கத்தார், அமெரிக்காவிடம் இஸ்ரேல் – ஹமாஸ் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அளித்த பேட்டியில், ‘அடுத்த ஒரு வாரத்திற்குள் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்’ என்றார். இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகையில், ‘அமெரிக்கா, எகிப்து, இஸ்ரேல் உளவுத்துறைத் தலைவர்கள் மற்றும் கத்தார் பிரதமருக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் படைகளை முழுவதுமாக வாபஸ் பெற வேண்டும் என்று ஹமாஸ் வலியுறுத்தியது. இஸ்ரேலால் சிறைவைக்கப்பட்ட பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கும் ஹமாசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இருதரப்பு போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சிக்கலான பிரச்னைகள் குறித்து பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்படும்’ என்றனர்.
The post பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் இஸ்ரேல் – ஹமாஸ் போர் ஒரு வாரத்தில் முடிவுக்கு வரும்: அமெரிக்க அதிபர் நம்பிக்கை appeared first on Dinakaran.