×

அவினாசிபாளையத்தில் பிரதமர் வருகைக்கு எதிராக போராட்டம்: கருப்பு கொடியேந்தி ஏராளமான விவசாயிகள் எதிர்ப்பு முழக்கம்!!

திருப்பூர்: கடந்த நாடாளுமன்ற பொது தேர்தல்களில் பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் அவினாசிபாளையத்தில் அழகுமலைப்பிரிவு அருகே தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கறுப்புக் கொடி ஏந்தியும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் மோடியின் தமிழ்நாடு வருகைக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

இந்திய வேளாண் மக்களுக்கு 2014 மற்றும் 2019 பொதுத்தேர்தலில் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களையும் எழுப்பினர். எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரையின்படி விளைபொருட்களுக்கு சாகுபடி செலவுடன் 50% கூடுதலாக சேர்த்து குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற மோடி அரசு நிறைவேற்றவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர். விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவோம் என்று கடந்த 2019ல் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியும் காற்றில் கரைந்துவிட்டதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

பின்னர் கறுப்புக்கொடி, கருப்பு பலூன்களை ஏந்தியவாறு பல்லடம் நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்ற விவசாயிகளை காவலர்கள் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனிடையே விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக-வினர் போட்டி போராட்டம் நடத்த திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாரத் மாதா ஹி ஜே என்று முழக்கமிட்டவாறு கூடிய பாஜக-வினரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் திருப்பி அனுப்பினர்.

The post அவினாசிபாளையத்தில் பிரதமர் வருகைக்கு எதிராக போராட்டம்: கருப்பு கொடியேந்தி ஏராளமான விவசாயிகள் எதிர்ப்பு முழக்கம்!! appeared first on Dinakaran.

Tags : Avinasipalayam ,Tirupur ,Narendra Modi ,parliamentary general elections ,Tamil Nadu Farmers Protection Association ,Tirupur district ,
× RELATED ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நியாயமான கூலி உயர்வை பெற்றுத்தர வேண்டும்