×

திட்ட அனுமதி இல்லாமல் கட்டுமான பணிகள் மேற்கொண்ட தனியார் மருத்துவமனை: நடவடிக்கை எடுக்காத சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட் அபராதம்

சென்னை: திட்ட அனுமதி இல்லாமல் கட்டுமான பணிகள் மேற்கொண்ட தனியார் மருத்துவமனைக்கும், நடவடிக்கை எடுக்காத சென்னை மாநகராட்சிக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டை சென்ட் மாரிஸ் சாலையில் 10 மாடியில் கட்டப்பட்டு வரும் எம்.ஜி.எம் மருத்துவமனை கட்டுமான பணியில் ஆழ்துளை ஆஸ்திவாரம் அமைக்கும் பணி காரணமாக சுற்றுப்புற பகுதியில் அதிகளவு ஒலி மாசு ஏற்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது கட்டடம் கட்டுவதற்கான அனுமதி தரப்படவில்லை எனவும் உரிய கட்டணம் செலுத்தும் பட்சத்தில் திட்ட அனுமதி வழங்கப்படும் எனவும் சிஎம்டிஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை அடுத்து எம்.ஜி.எம் மருத்துவமனை கட்டுமான பணிகளை தொடர்வதற்கு இடைக்கால தடை விதித்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். சுப்ரமணியம் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது திட்டம் அனுமதி கோரிய விண்ணப்பம் நிலுவையில் உள்ளபோதே அருகில் உள்ள சென்ட். பிரான்சிஸ் பள்ளி கட்டடத்தில் விரிசல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதாக கடந்த செப்டம்பர் மாதம் புகார் அளித்ததை நீதிபதிகள் சுட்டி காட்டினர். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் கடந்த 8ம் தேதி அனுப்பிய கடிதத்தில் மருத்துவமனைகள் கட்டுவதற்கான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது என்றும் புகார் அளித்த பள்ளியின் கட்டடம் உரிய திட்ட அனுமதி பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

60 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்ட பள்ளி கட்டடத்தில் திட்ட அனுமதி தொடர்பாக தற்போது கேள்வி எழ என்ன காரணம் ? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மருத்துவமனை கட்டுமான பணிகள் முடிந்த பிறகு பள்ளி பழுதுபார்க்கப்படும் என கூறியிருந்தாலும், கட்டணப்பணிகள் நடக்காது என்ற உத்தரவாதமும் அளித்ததாலும் நடவடிக்கை எடுக்கவில்லை என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவுபடி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடந்த பிப்ரவரி 2ம் தேதி ஆய்வு செய்த போதும் ஒலி மாசு இருந்ததும், அனுமதி பெறாமல் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்ததாக தெரிவித்த நீதிபதிகள், சட்ட விரோத கட்டுமானங்களுக்கு லஞ்சம் பெற்று இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் சமுதாயத்தில் பண பலம் மற்றும் அதிகாரம் உள்ளவர்கள் தான் வாழ முடிவதாகவும், சாதாரண மக்களால் சிறிய வீடு கட்ட வேண்டும் என்றால் கூட லஞ்சம் கேட்பதாக அதிர்ப்பித்தி தெரிவித்தனர்.

இந்த நிலையில் கட்டுமான பணிகளுக்கான திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிஎம்டிஏ சார்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதிகள் ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கியத்துடன் திட்ட அனுமதி பின்பற்றி தான் கட்டுமானங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் விதி மீறல்கள் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

திட்ட அனுமதி இல்லாமல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதித்ததன் மூலம் கடமையை தவறிவிட்டதாக அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள். சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு தலா ரூ.5 லட்சம் அபராதம். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ரூ.2 லட்சம், எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகத்திற்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

இந்த அபராத தொகை ரூ.37 லட்சத்தை அடையாறு புற்றுநோய் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். எம்.ஜி.எம் மருத்துவமனை கட்டுமான பணிகள் குறித்து சி.எம்.டி.ஏ, சென்னை மாநகராட்சி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை 15 நாட்களுக்கு ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

The post திட்ட அனுமதி இல்லாமல் கட்டுமான பணிகள் மேற்கொண்ட தனியார் மருத்துவமனை: நடவடிக்கை எடுக்காத சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட் அபராதம் appeared first on Dinakaran.

Tags : ICourt ,Chennai Corporation ,CHENNAI ,Chennai High Court ,Chennai Municipal Corporation ,MGM Hospital ,St. Maurice Road, Alwarpet, Chennai ,Dinakaran ,
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு