×

பசுந்தேயிலைக்கு ரூ.2 மானியம் அறிவிப்பு தமிழ்நாடு முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க விவசாயிகள் முடிவு

ஊட்டி : பசுந்தேயிலைக்கு ரூ.2 மானியம் அறிவித்த தமிழ்நாடு முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. 66 ஆயிரம் சிறு மற்றும் குறு விவசாயிகள் உள்ளனர். இவர்கள் தாங்கள் உற்பத்தி செய்த பசுந்தேயிலையை கூட்டுறவு தொழிற்சாலைகள் மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருகின்றனர்.

மாவட்டம் முழுவதும் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு தாங்கள் உற்பத்தி செய்யப்படும் பசுந்தேயிலையை விநியோகம் செய்து வருகின்றனர். ஆனால், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் சிறு மற்றும் குறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேயிலைக்கு விலை உயர்த்தி வழங்கும் அதிகாரம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேயிலை வாரியத்திற்கு மட்டுமே உள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆளும் பாஜ அரசு கண்டு கொள்ளவில்லை. பசுந்தேயிலைக்கு விலை உயர்த்தி வழங்க வேண்டும் என தொடர்ந்து விவசாயிகள் ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் பிரதமருக்கு மனுக்கள் அளித்த போதிலும் விலை உயர்வு குறித்து ஒன்றிய அரசு இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால், நீலகிரிமாவட்டத்தில் உள்ள விவசாயிகள் விரக்தியில் இருந்து வந்தனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளின் நலன் கருதி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை விநியோகம் செய்யும் விவசாயிகளுக்கு ரூ.9 கோடி ஒதுக்கீடு செய்து மானியம் வழங்கப்படும் என சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவித்தார். இதன் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை விநியோகம் செய்யும் விவசாயிகள் 28 ஆயிரம் சிறு மற்றும் குறு விவசாயிகள் பேர் பயன் அடைவர்.

தேயிலைக்கு மானியம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் உறுப்பினர்களாக உள்ள பசுந்தேயிலை விவசாயிகள் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலை விவசாயிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலை விவசாயிகள் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

நேற்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை உறுப்பினர்களின் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பலர் தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்ததுடன், முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து தேயிலை விவசாயிகள் தங்களது நன்றியை தெரிவிக்க நேரம் பெற்றுத்தருமாறு அமைச்சர் ராமச்சந்திரனிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தில் ரங்கராஜன், ஒன்றிய செயலாளர் பரமேஸ்வரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

The post பசுந்தேயிலைக்கு ரூ.2 மானியம் அறிவிப்பு தமிழ்நாடு முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க விவசாயிகள் முடிவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Tamil Nadu ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு...