×

நீதிமன்ற உத்தரவு எதிரொலி சடலத்தை தோண்டி எடுத்து வேறு இடத்தில் உடல் அடக்கம்

2 கி.மீ. தூரம் தூக்கி சென்ற அதிகாரிகள்-பரபரப்பு

கண்டாச்சிபுரம் : விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே நீதிமன்ற உத்தரவினால் 70 வயது மூதாட்டியின் சடலத்தை தோண்டி எடுத்து, பொதுமக்களின் எதிர்ப்பை மீறி 2 கிலோ மீட்டர் தூரம் தூக்கி சென்ற அதிகாரிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கண்டாச்சிபுரம் அடுத்த ஒதியத்தூர் ஊராட்சியை சேர்ந்த திருமல்ராயபுரம் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் அதே பகுதியில் உள்ள பட்டா நிலத்தை சுடுகாடாக பயன்படுத்தி வந்துள்ளனர். இது தொடர்பாக பிரச்னை எழுந்தது. இதனால் கிராமத்தின் எல்லையில் இருந்த பொது இடத்தை சுடுகாடாக பயன்படுத்த வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையே ஆதி திராவிடர் பகுதியை சேர்ந்த ராணியம்மாள் (70) என்பவர் வயது மூப்பின் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்தார்.

அவரது உடலை வழக்கமாக புதைத்து வந்த பட்டா நிலத்தில் உறவினர்கள் புதைத்தனர். இதுதொடர்பாக நிலத்தின் உரிமையாளர் ஜெயமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அதில் 3 வாரங்களுக்குள் பட்டாநிலத்தில் உள்ள சடலத்தை தோண்டி எடுத்து, ஏற்கனவே ஒதுக்கப்பட்ட சுடுகாட்டில் உடலை புதைக்க வேண்டுமென உத்தரவிட்டது. இதையடுத்து சடலத்தை தோண்டி எடுக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். விழுப்புரம் கோட்டாட்சியர் சாகுல் அமீத் தலைமையில் சென்ற அதிகாரிகளை வழிமறித்து, சாலை முழுவதும் 200 மீட்டர் அளவுக்கு கற்களை வைத்து மறியலில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து விழுப்புரம் கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டு கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் கற்பகம் முன்னிலையில் வருவாய்த்துறையினர் சடலத்தை தோண்டி எடுத்தனர் அப்போது சடலத்தை ஊரின் வழியாக எடுத்துசெல்லக்கூடாது என ஒரு பிரிவினரும், சம்பிரதாயத்தின்படி இறந்தவரை அதே வழியில் மீண்டும் கொண்டு செல்லக்கூடாது என மற்றொரு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருதரப்பினரும் சடலத்தை ள் எடுத்து செல்ல முடியாதபடி தெருக்களில் முள்வேலி, கற்கள் கொண்டு தடுத்து நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் செய்வதறியாமல் அதிகாரிகள் திகைத்தனர். பின்னர் மூதாட்டியின் சடலத்தை வருவாய்த்துறையினர், காவல்துறையினர் தங்கள் கைகளினால் சுமந்தபடி விவசாய நிலங்கள் வழியாக எடுத்து சென்றனர். அப்போது நிலத்தின் உரிமையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து அதனை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனை பொருட்படுத்தாமல் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு சடலத்தை சுமந்து வந்து, ஆதிதிராவிடர் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சடலத்தை புதைத்தனர். அப்போது அங்கு திரண்ட மக்கள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கூட்டத்தை கலைத்தனர். 3 நாட்களாக நீடித்து வந்த பிரச்னை முடிவுக்கு வந்தது. மீண்டும் இது போன்ற பிரச்னை ஏற்படாமல் இருக்கபிரச்னைக்கு நிரந்தரதீர்வு காணப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post நீதிமன்ற உத்தரவு எதிரொலி சடலத்தை தோண்டி எடுத்து வேறு இடத்தில் உடல் அடக்கம் appeared first on Dinakaran.

Tags : Panaparapu Kandachipuram ,Kandachipuram ,Villupuram district ,
× RELATED 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள்...