*அத்தியூர் ஊராட்சி தலைவர் மனு
வேலூர் : புதிதாக போடப்பட்ட தார்ச்சாலையில் கற்களை நட்டு செடிகளை நட்டுள்ள ஆக்கிரமிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அத்தியூர் ஊராட்சி மன்றத் தலைவர் அண்ணாமலை நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளித்தார்.வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. டிஆர்ஓ மாலதி தலைமை தாங்கினார். திட்ட இயக்குனர் ஆர்த்தி, மகளிர் திட்ட இயக்குனர் நாகராஜன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் கலியமூர்த்தி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சீதா, மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
குடியாத்தம் எர்த்தாங்கல் கிராமத்தை சேர்ந்த 15 குடும்பங்களை சேர்ந்தவர்கள் தங்களுக்கு வீட்டு மனை கேட்டு பலமுறை மனு அளித்தும் பலனில்லை. எனவே, இப்போதாவது தங்களுக்கு உரிய விசாரணை நடத்தி வீட்டுமனை வழங்க வேண்டும் என்று கேட்டு மனு அளித்தனர்.அத்தியூர் ஊராட்சி மன்றத் தலைவர் அண்ணாமலை அளித்த மனுவில், ‘சிவநாதபுரம்- அத்தியூர் தார்ச்சாலை தற்போது தமிழக முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் புதிய தார்ச்சாலை போடப்பட்டுள்ளது.
திடீரென இந்த சாலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் கற்களை நட்டு செடிகள் நட்டுள்ளார். இதனால் அந்த வழியாக பொதுமக்கள் இடுகாட்டுக்கு செல்வதற்கும், ஊராட்சி மன்ற அலுவலகம், விஏஓ அலுவலகம் செல்வதற்கும் சிக்கல் ஏற்படும். எனவே, இந்த சாலையை சரியாக அளவீடு செய்வதுடன், திடீரென சாலை ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை வேளாண்மைத்துறை, காவல்துறை. ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் வேண்டி, மின்சாரத்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மருத்துவத்துறை, கிராம பொதுப்பிரச்னைகள், குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் சார்ந்த மனுக்கள் என மொத்தம் 508 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு டிஆர்ஓ மாலதி உத்தரவிட்டார்.
The post மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் சாலையை ஆக்கிரமித்து கற்கள் நட்டவர் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.