×

வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ₹1 கோடியில் கட்டப்பட்ட உலர் வசதி கிடங்கு

*விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி

வலங்கைமான் : வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு, முன் இரண்டு கிடங்குகள் ஏற்கெனவே உள்ளநிலையில் தற்போது விவசாயிகளின் நலன் கருதி உலர் வசதியுடன் கூடிய கிடங்கு ரூ.1கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு விவசாயிகள் பயன் பாட்டிற்கு வர உள்ளது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் சம்பா மற்றும் தாளடி அறுவடை பணிகள் முடிவுற்ற நிலையில் ஆதிச்ச மங்கலம், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, மருவத்தூர், மேலவிடையல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 8ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்படுவது வழக்கம். அதனையடுத்து திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வலங்கைமான் நீடாமங்கலம் சாலையில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் பருத்தி ஏலம் பருத்தி மகசூல் காலங்களில் நடைபெறுகிறது.

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறும் பருத்தி ஏலத்தில் விவசாயிகள் தங்களது பருத்தியினை நன்கு உலர்த்தி கொண்டுவந்து ஏலத்தில் கலந்து கொள்கின்றனர். விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் பருத்தியினை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கு இரண்டு இருப்பு வைப்பறைகள் முன்னதாக கட்டப்பட்டுள்ளது.சரியான எடை மற்றும் நல்ல விலையில் பருத்தியினை இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்வதால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தினை பருத்தி விவசாயிகள் பயன் படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விவசாயிகளின் நலன் கருதி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கூடுதலாக நபார்டு திட்டத்தின் கீழ் 2021-22ம் நிதியாண்டில் ஒரு கோடி மதிப்பீட்டில் கூடுதல் கிடங்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.இந்த கிடங்கு கட்டிடம் 30 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்ட வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கிடங்கோடு உலர்த்தும் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் குறுவை உள்ளிட்ட நாட்களில் விவசாயிகள் அறுவடை செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை உலர்த்துவதற்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைக்கப்பட்டுள்ளது

இதனை பயன்படுத்தி விவசாயிகள் நெல்லின் ஈரபதத்தை உலர்த்தி இருப்பு வைக்கவோ அல்லது விற்பனை செய்வதற்கோ விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். கட்டிடத்திற்கு மின் இணைப்பு மற்றும் அணுகு சாலைகள் அமைக்கப்பட்டு விரைவில் விவசாயிகள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இந்த உலர்கலன் பயன்பாட்டிற்கு வந்தால் அறுவடையின்போது, அவ்வப்போது மழையில் நனையும் நெல்மணிகளை விவசாயிகள் ஓரளவு காப்பாற்றி கொண்டு வந்தால் இந்த உலர்கலத்தில் கொடி உடனுக்குடன் உலர்த்தி, அங்கேயே கொள்முதல் செய்து கொள்ளலாம்.

மேலும், அங்கேயே உள்ள களத்தில் கொட்டி உலர்த்தி கொள்ளும் வசதியும் உள்ளது. இந்த கிடங்கு விரைவில் திறக்கப்பட்டால் விவசாயிகளுக்கு கூடுதல் பலனை கொடுக்கும் என்று அப்பகுதி விவசாயிகள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

*விவசாயிகள் அச்சம் தீர்ந்தது

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் சுமார் 14000 ஹெக்டேரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் சுமார் 10,000 ஏக்கரில் குருவை சாகுபடி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. குருவை அறுவடை காலங்களில் பெய்யும் மழை காரணமாக நெல்லின் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் நெல்லினை உலர்த்துவதற்கு போதிய இடவசதி இன்றி சாலைகளில் கொட்டி விவசாயிகள் உலர்த்தி வருவது வழக்கம்.

அவ்வப்போது பெய்யும் திடீர் மழையின் காரணமாக நெல்களை உலர்த்துவதில் பெரும் சிக்கல் ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டு விவசாயிகளின் நலன் கருதி வலங்கைமான் தாலுகாவில் முதன்முதலாக ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கீழ் உலர் கலத்துடன் கூடிய கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது பெரும் பயனாக இருக்கும்.மேலும் வலங்கைமான் பகுதியில் சம்பா அறுவடைக்குப் பிறகு சாகுபடி செய்யப்படும் பருத்தியினை மகசூல் காலங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கூடுதல் கிடங்கு அமைத்ததன் மூலம் விவசாயிகள் அச்சமின்றி பருத்தி யினை மகசூல் காலங்களில் கொண்டு சென்று மறைமுக ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

The post வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ₹1 கோடியில் கட்டப்பட்ட உலர் வசதி கிடங்கு appeared first on Dinakaran.

Tags : Walangaiman ,Regulatory Sales Hall ,Valangaiman ,Valangaiman Regulation Hall ,Dinakaran ,
× RELATED வலங்கைமான் பகுதியில் வேகமாக குறைந்து...