×

கீழ்பென்னாத்தூரில் பெற்றோருடன் பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

*போலீசார் சமரசம்

கீழ்பென்னாத்தூர் : கீழ்பென்னாத்தூரில் பெற்றோருடன் பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
கீழ்பென்னாத்தூர் தாலுகாவை சேர்ந்த ஜமீன்கூடலூர், அகரம், கோணலூர் மற்றும் ராஜந்தாங்கல், உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து புதிய ஆதார் கார்டு பதிவு செய்தல், ஆதார் கார்டு பிழை திருத்துதல், ஆதார் கார்டு அப்டேட் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் இயங்கி வரும் இ-சேவை மையத்தை மட்டுமே நம்பியுள்ளனர்.

இந்த இ-சேவை மையத்தில் பள்ளி மாணவர்களின் ஆதார் கார்டுகளில் உள்ள புகைப்படம் மற்றும் விவரங்களை பிழைதிருத்த கடந்த நான்கு நாட்களாக மாணவர்களும் பெற்றோர்களும் அலைகழிக்கப்படுவதாக கூறப்படுகிறது. பின்னர் பள்ளி மாணவர்களுடன் பெற்றோர் ஆதார் திருத்தம் மேற்கொள்ள கடந்த வாரம் வந்தபோது இ-சேவை மையத்தில் நாளைக்கு வரும்படி கூறி ஒவ்வொரு நாளும் திருப்பி அனுப்பி வருகிறார்களாம்.

இந்நிலையில், நேற்று காலையில் மீண்டும் வந்தபோது ஆதார் பதிவு மையம் பூட்டி கிடந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் பள்ளி மாணவர்களுடன் திருவண்ணாமலை – திண்டிவனம் நெடுஞ்சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் 30க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் பெற்றோரிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, ஆதார் அப்டேட் செய்வதால் மாணவர்கள் தினமும் ஆதார் மையத்திற்கு சென்று வருவதால் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. தேர்வு எழுத இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பள்ளியில் வேலை நாட்கள் மட்டுமே இ-சேவை மையம் செயல்படுகிறது. அவ்வாறு செயல்படும் இ-சேவை மையமும் முறையாக பதிவுகள் மேற்கொள்ளப்படவில்லை எனக்கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், போலீசார் இ-சேவை மையத்தில் உரிய பதிவுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின்பேரில் பெற்றோரும் பள்ளி மாணவர்களும் சாலை மரியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் கால் மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

The post கீழ்பென்னாத்தூரில் பெற்றோருடன் பள்ளி மாணவர்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Kilipennathur ,Kilibennathur ,Zaminkoodalur ,Akaram ,Konalur ,Rajantangal ,Kilibennathur taluk ,
× RELATED கர்நாடக போலீஸ் அதிகாரி உட்பட 3 பேரின்...