×

திருவட்டார் பேரூராட்சியில் 20 ஆண்டு சாலை பிரச்னைக்கு தீர்வு

*பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

குலசேகரம் : திருவட்டார் பேரூராட்சிக்குட்பட்ட சாரூர் பகுதியில் தெற்றவிளை, பொய்விளை, கொக்கவிளை, ஊற்றான்சாணி, விராலிக்காட்டுவிளை ஆகிய குக்கிராமங்களில் 300 க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்கள் அருகில் உள்ள பெரிய ஊர்களான சாரூர், பாரதபள்ளி போன்ற இடங்களுக்கு செல்ல சாலை வசதி இல்லாத நிலை இருந்தது. அவசர தேவைகளுக்கு நோயாளிகளை சுமார் 3 கிமீ தூரம் வரை மக்கள் சுமந்து செல்ல வேண்டிய சூழல் இருந்தது. இதனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதி மக்கள் இணைந்து புதியதாக சாலை அமைத்தனர்.

இந்த சாலைக்கு எதிராக தனி நபர் ஒருவர் நீதி மன்றம் சென்றதால் சாலை கிடப்பில் கிடந்தது. இந்த சாலை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், புதியதாக சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் அமைச்சராக பொறுப்பேற்ற மனோதங்கராஜ் பொது மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான சாலை பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுத்தார்.

இந்த சாலை பிரச்சினையை திருவட்டார் பேரூராட்சி தலைவர் பெனிலா ரமேஷ் அமைச்சர் மனோதங்கராஜ் பார்வைக்கு கொண்டு சென்றார். இதனையடுத்து இதற்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சம்மந்தப்பட்ட பகுதியை வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர் பார்வையிட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுத்தனர்.இதனையடுத்து பிரச்சினைக்குரிய கொக்கவிளை பகுதியில் நமக்கு நாமே திட்டத்தில் ₹10.50 லட்சத்தில் வடிகால் மற்றும் சாலை அமைக்கப்பட்டது. இதற்கு பேரூராட்சி சார்பில் ₹7 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பொது மக்கள் சார்பில் ₹3.50 லட்சம் வழங்கப்பட்டது. இதன் மூலம் 20 ஆண்டுகளாக இருந்த சாலை பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டு வாகனங்கள் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனை திருவட்டார் பேரூராட்சி தலைவர் பெனிலா ரமேஷ் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் கவுன்சிலர்கள் பரமேஸ்வரி, சுவாமிதாஸ், பங்குத்தந்தை பிராங்கிளின் ஜோஸ், துணை பங்குதந்தை விபின் வில்சன் மற்றும் ஊர்பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 20 ஆண்டு பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். இந்த சாலையை முழுமையாக சீரமைத்து எல்லா வாகனங்களும் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருவட்டார் பேரூராட்சியில் 20 ஆண்டு சாலை பிரச்னைக்கு தீர்வு appeared first on Dinakaran.

Tags : Thiruvatar ,Kulasekaram ,Theratavilai ,Poivilai ,Kokkavilai ,Porvansani ,Viralikattuvilai ,Sarur ,Bharatpalli ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...