×

தண்டவாளத்தில் மாடு வந்ததால் விபத்து மேட்டுப்பாளைத்தில் இருந்து ஊட்டிக்கு வந்த மலை ரயில் தடம் புரண்டது

ஊட்டி : பர்ன்ஹில் அருகே தோடர் வளர்ப்பு மாடு குறுக்கே வந்தபோது மலை ரயில் பிரேக்மேன் திடீரென பிரேக் போட்டதால் ரயிலின் கடைசி பெட்டி தடம் புரண்டது.
இயற்கை சூழலுடன் வனங்களுக்கு நடுவே செல்லும் நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஊட்டி வரக்கூடிய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் சீசன் சமயங்களில் வரக்கூடிய சுற்றுலா பயணிகள் பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து பயணித்து மகிழ்கின்றனர். மலை ரயில் அதிகபட்சமாக 30 கிமீ வேகத்தில் மட்டும் இயங்கும்.

இதில் ஒவ்ெவாரு பெட்டியிலும் தனித்தனியாக பிரேக்மேன் இருப்பார்கள். அவர்கள் ரயில் மேல்நோக்கி வரும்போதும், சரிவில் செல்லும்போதும் ரயில் சீராக பயணிக்கிறதா? என்பதை கண்காணித்தபடியே இருப்பார்கள். வழக்கமாக மற்ற ரயில்களில் பெட்டிகளுக்கு முன்புறம் என்ஜின் இணைக்கப்பட்டிருக்கும். மலை ரயிலில் மலைப்பகுதியில் மேல் நோக்கி வரும்போது உந்தி தள்ளி செல்லும் வகையில் பெட்டிகளுக்கு பின்புறம் என்ஜின் பொருத்தப்பட்டு இருக்கும்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி நோக்கி வரும்போது பெட்டிகளை மேல்நோக்கி தள்ளியபடி பயணிக்கும். வழக்கம்போல் நேற்று காலை 7.10 மணிக்கு 200க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது. 11.50 மணியளவில் ஊட்டி ரயில் நிலையத்தை நெருங்க 1 கிமீ தூரமே இருந்த நிலையில் பர்ன்ஹில் குகையை தாண்டி ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தின் அருகே மேய்ந்து கொண்டிருந்த தோடர் வளர்ப்பு மாடு திடீரென தண்டவாளத்தை கடந்துள்ளது. இதனை கவனித்த முதல் வகுப்பு பெட்டியில் இருந்த பிரேக்மேன், மாடு மீது ரயில் மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டார்.

ஆனால் என்ஜின் பின்புறம் இருந்து பெட்டிகளை தள்ளி வந்த நிலையில் உடனடியாக பிரேக் போட முடியாததால் என்ஜினுடன் இணைக்கப்பட்ட கடைசி பெட்டி தடம் புரண்டது. ரயில் பெட்டி மோதியதில் வளர்ப்பு மாடு பரிதாபமாக பலியானது. குறைந்த வேகத்தில் மலை ரயில் வந்ததால் விபத்து ஏதுவும் ஏற்படவில்லை. பெட்டி கவிழாமல் அப்படியே நின்றது.
இதில் பயணித்த பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. உடனடியாக ஊட்டி ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து பயணிகளும் தனியார் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஊட்டி ரயில் நிலையத்தில் இருந்த ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கிரேன் உதவியுடன் பெட்டியை தண்டவாளத்தில் நிறுத்த முடியும் என்பதால், ஜேசிபி கிரேன் வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனிடையே ஊட்டி-குன்னூர் மற்றும் ஊட்டி-குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சேவை நேற்று தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட ரயில்களில் முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு ரயில் கட்டணம் முழுமையாக திரும்ப வழங்கப்படும் என தென்னக ரயில்வே சேலம் கோட்டம் தெரிவித்துள்ளது.
இதனால் மலை ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்திருந்த சுற்றுலா பயணிகள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.

8 மாதத்திற்கு பிறகு மீண்டும் விபத்து

நீலகிரி மலை ரயில் ஊட்டி-குன்னூர் இடையேயும், ஊட்டி-குன்னூர்-மேட்டுபாளையம் இடையேயும் இயக்கப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2008ம் ஆண்டு தடம் புரண்டது. உடனடியாக சரி செய்யப்பட்டது. அதன் பின்னர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 8ம் தேதி குன்னூர் ரயில் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் புறப்பட்ட சில வினாடிகளில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இதிலும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. 8 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் நேற்று ஊட்டியில் மலை ரயில் தடம் புரண்டது குறிப்பிடத்தக்கது.

5 மணி நேரம் போராட்டம்

பர்ன்ஹில் குகை அருகே மலை ரயில் பெட்டி தடம் புரண்ட நிலையில், அதனை தண்டவாளத்தில் மீண்டும் நிலை நிறுத்துவதற்காக ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டது. கிரேன் தண்டவாளம் அருகே செல்லும் வகையில் ஜேசிபி உதவியுடன் வழி ஏற்படுத்தப்பட்டது. ரயில் பெட்டியை தண்டவாளத்தில் நிலை நிறுத்தும் பொருட்டு அந்த பெட்டியை மட்டும் தனியாக கழற்றினர். பின்னர் கிரேன் தண்டவாளத்தின் அருகே கொண்டு செல்லப்பட்டு சுமார் 5 மணி நேரம் போராடி ரயில் பெட்டியை மாலை 4.45 மணியளவில் தண்டவாளத்தில் நிறுத்தினர். தொடர்ந்து ரயில் என்ஜினுடன் இணைக்கப்பட்டு பராமரிப்புக்காக குன்னூர் ரயில்வே பணிக்கு கொண்டு செல்லப்பட்டது.

The post தண்டவாளத்தில் மாடு வந்ததால் விபத்து மேட்டுப்பாளைத்தில் இருந்து ஊட்டிக்கு வந்த மலை ரயில் தடம் புரண்டது appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,Ooty ,Todar ,Barnhill ,Nilgiri mountain ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...