- மேயர்
- மாநகராட்சி குறைதீர் கூட்டம்
- 47வது வார்டு
- திருச்சி
- அன்பசகன்
- மக்கள் குறை நாள்
- மாநகர
- மாநகராட்சி
- பொது குறை மறுசீரமைப்பு நாள்
- திருச்சி கார்ப்பரேஷன்
- அன்பழகன்
- மாநகராட்சி குறை தீர்க்கும்
- தின மலர்
திருச்சி, பிப்.27: திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து மேயர் அன்பழகன் பெற்றுக்கொண்டார். திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் சரவணன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் பிரச்னைகள், தெருவிளக்கு அமைத்து கொடுத்தல் மற்றும் புதைவடிகால் தொடர்பான கோரிக்கைகள் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பான மனுக்களை பொதுமக்களிடம் இருந்து மேயர் அன்பழகன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து அந்த மனுக்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி, துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் துணை மேயர் திவ்யா, நகர பொறியாளர் சிவபாதம், மண்டல தலைவர்கள் துர்காதேவி, ஜெயநிர்மலா மற்றும் மாநகராட்சி துணை கமிஷனர், செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி கமிஷனர்கள், உதவி செயற்பொறியாளார்கள் மற்றும் சுகாதார அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பாலாஜிநகர் பகுதி மக்கள் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுவில், திருச்சி-தஞ்சை சாலையில் அமைந்திருக்கும் பாலாஜி நகர் பகுதியில் பல நூறு குடும்பங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இருக்கும் அனைத்து நகர்களுக்கும் மாநகராட்சி சார்பில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. பாலாஜி நகருக்கும் மற்ற நகர்களை போன்று திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பெயர்ப்பலகை வைத்துக்கொடுக்க வேண்டும். அதே போன்று நகரின் உட்புறம் அமைந்துள்ள தெருக்களுக்கும் பெயர் பலகை அமைத்துக்கொடுக்க வேண்டும்.
மொராய்ஸ் கார்டன் ரன்வே நகர் பகுதி மக்கள் அளித்த மனுவில்,
திருச்சி மாநகராட்சி 47வது வார்டுக்கு உட்பட்ட கொட்டப்பட்டு மொராய்ஸ் கார்டன் ரன்வே நகர் (மொராய்ஸ் சிட்டி பேஸ்-3 மற்றும் மொராய்ஸ் கார்டன் விரிவாக்கம்) பகுதியில் 12 தெருக்கள் உள்ளன. இவற்றில் பல நுாறு வீடுகள் உள்ளன. இப்பகுதியில் தெருவிளக்கு தவிர வேறு எந்த வசதியும் இல்லாமல் பல ஆண்டுகளான அவதிப்பட்டு வருகிறோம். பாதாள சாக்கடை உட்பட வெங்கடேஸ்வரா நகர் விரிவாக்கம், மதுரை வீரன் கோயில் தெரு உட்பட மேலும் சில வீதிகளிலும் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்படவில்லை. மொராய்ஸ் சிட்டி பேஸ்-3 பகுதியில் தினமும் லாரியின் வாயிலாக கழிவுநீரை உறிஞ்சி எடுக்கும் நிலை உள்ளது. எனவே பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்படாமல் இருக்கும் இப்பகுதிகளுக்கு விரைந்து பாதாள சாக்கடை திட்டத்தை அமைத்து கொடுக்க வேண்டும்.
26வது வார்டு கல்லாங்காடு பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், திருச்சி மேற்கு தொகுதி 26வது வார்டு கல்லாங்காடு மேற்கு மற்றும் வடக்கு தெருக்களில் சிமெண்ட் சாலை மிக தாழ்வாக உள்ளது. இந்நிலையில் கழிவுநீர் கால்வாயும் திறந்தவெளியில் உள்ளதால் மழை காலங்களில் கழிவு நீருடன் மழை நீரும் சேர்ந்து சாலையெங்கும் மூன்று அடிக்குமேல் ஓடுகிறது. இதுகுறித்து பல்வேறு முறை புகார் அளித்ததில் அதிகாரிகள் ‘சம்ப்’ ஒன்று கட்டினர். ஆனால் இதில் குப்பை சேர்ந்து கொள்வதால் சம்ப்பில் இருந்து கழிவுநீரை ஏற்ற இயலவில்லை. மோட்டாரும் அவ்வப்போது பழுதாகிவிடுகிறது. எந்த சூழ்நிலையிலும் இது நிரந்தர தீர்வாகாது.
எனவே எங்கள் பகுதி சிமெண்ட் சாலையை மூன்று அடிக்கு உயர்த்தி அமைப்பதுடன், பாதாள சாக்கடை திட்டம் அமைத்து கழிவுநீர் தங்கு தடையின்றி வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post 47வது வார்டு விரிவாக்க பகுதியில் பாதாள சாக்கடை அமைக்க வேண்டும் மாநகராட்சி குறைதீர் கூட்டத்தில் மேயரிடம் கோரிக்கை appeared first on Dinakaran.