பாடாலூர், பிப். 27: பெரம்பலுர் கொளத்தூரில் நடந்த ஜல்லிக்கட்டில் 727 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் முட்டியதில் 34 பேர் காயமடைந்தனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளத்தூர் கிராமத்தில் கிராம மக்கள் சார்பில் குப்பன் ஏரியில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. இது இந்தாண்டு இம்மாவட்டத்தில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு. இதற்காக பெரம்பலூர், அரியலூர், கடலூர், சேலம், திருச்சி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன. காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இறுதியாக 727 காளைகள், 280 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
காலை 7.45 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டியை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். கலெக்டர் கற்பகம், எம்எல்ஏ பிரபாகரன், சார் ஆட்சியர் கோகுல், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி, கால்நடை மண்டல இணை இயக்குநர் தமிழரசு(பொ), தாசில்தார் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முதலாவதாக வாடி வாசலில் இருந்து கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து மற்ற ஊர் காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது. களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.
காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், கட்டில், பீரோ,மெத்தை, சேர், மிக்சி, எவர்சில்வர் பாத்திரங்கள் மற்றும் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது. காளைகள் முட்டியதில் 16 வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள் 16 பேர், 2பார்வையாளர்கள் என 34 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 9 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பெரம்பலூர் டிஎஸ்பி பழனிசாமி மேற்பார்வையில் 9 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர், ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் துரை, ஜல்லிக்கட்டு பேரவை துணைத் தலைவர் துரை மாணிக்கம், செயலாளர் தனுஷ்கோபி மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
The post பெரம்பலூர் கொளத்தூரில் ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த 720 காளைகள் appeared first on Dinakaran.