×

புனே ரிங் ரோடு திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணியை விரைவு படுத்த வேண்டும்: மண்டல கமிஷனர் உத்தரவு

புனே: புனே ரிங் ரோடு திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைவு படுத்தி, அனைத்து பணிகளையும் அடுத்த 2 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று புனே மண்டல கமிஷனர் சந்திரகாந்த் புல்குந்த்வார் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்து உள்ளார். புனேயின் கனவுத் திட்டமான ரிங் ரோடு திட்டமானது அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடக்கின்றன.இதற்காக, 34 கிராமங்களில் டெண்டர் விடப்பட்டு அதில், 31 கிராமங்களில் கிட்டத்தட்ட 1,591 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

ஆனபோதும், கிழக்கு பகுதியான கெத், போர், மாவல் தாலுகாக்களுக்கான நிலம் கையகப்படுத்தும் டெண்டர்கள் வருவாய்த்துறையால் இன்னும் வெளியிடப்படவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் இது தொடர்பாக புனே மண்டல கமிஷனர் புல்குந்த்வார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், மகாராஷ்டிர மாநில சாலை மேம்பாட்டுக் கழகத்தின் (எம்எஸ்ஆர்டிசி) இயக்குநர் கைலாஸ் ஜாதவ், மாவட்ட கலெக்டர் சுஹாஸ் திவாஸ், நிலம் கையகப்படுத்துதல் ஒருங்கிணைப்பாளர் கல்யாண் பந்த்ரே ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய பல்வேறு மாநில அரசுத் துறைகளைச் சேர்ந்த அனைத்து உயர் அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது புனே மண்டல கமிஷனர் சந்திரகாந்த் புல்குந்த்வார் கூறியதாவது: புனே மாவட்டத்தில் போக்குவரத்தை சீர்செய்யும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. மேற்கு ரிங் ரோடு திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் கிட்டத்தட்ட 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளன. எனவேதான் எம்எஸ்ஆர்டிசி அதிகாரிகள் டெண்டர் வெளியிட்டு உள்ளனர். எவ்வாறாயினும், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலானது, திட்டப்பணிகளை பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் நிலம் கையகப்படுத்தும் செயல்முறையை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும், என்றார்.

The post புனே ரிங் ரோடு திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணியை விரைவு படுத்த வேண்டும்: மண்டல கமிஷனர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Pune Ring Road ,Zonal ,Pune ,Commissioner ,Chandrakant Phulkundwar ,Pune's… ,Pune Ring ,Dinakaran ,
× RELATED மனைவியை ஆதரித்து அஜித் பவார் பிரசாரம்:...