×

விவசாயி விரோதப் போக்கை மறைக்கத்தான் ஒன்றிய அரசு சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா வழங்கியுள்ளது: சரத் பவார் கட்சி குற்றச்சாட்டு

மும்பை: விவசாயிகள் விரோத போக்கை மறைக்கத்தான் ஒன்றிய அரசு மறைந்த பிரபல வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருதை வழங்கியதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி-சரத்சந்திர பவார் கட்சி கூறியுள்ளது. டெல்லியில் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாய உற்பத்தி பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை நிரணியிக்க வேண்டும் என்பதே அவர்களது முக்கிய கோரிகிக்கை ஆகும். ஆனால் ஒன்றிய அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை. இதனால்தான் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

போராட்டத்தை நசுக்க ஒன்றிய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இந்தியாவில் பசுமை புரட்சிக்கு வித்திட்ட டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ஒன்றிய அரசு பாரத ரத்னா விருது வழங்கியுள்ளது. இது பற்றி சரத் பவார் கட்சியின் ஊடக தொடர்பாளர் கிளைட் கிராஸ்டோ கூறியதாவது: விவசாயிகள் விரோத போக்கை மறைக்கத்தான் ஒன்றிய அரசு எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்கியுள்ளது. விவசாய உற்பத்தி பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க வேண்டும் என்பதே எம்.எஸ்.சுவாமிநாதனின் கனவாகும். போராட்டம் நடத்தும் விவசாயிகளின் கோரிக்கையும் இதுதான்.

ஆனால் அதை செயல்படுத்த ஒன்றிய அரசு விரும்பவில்லை. தற்போதைய விவசாயிகள் போராட்டம் தொடங்கி இரண்டு வாரங்களுக்கு மேலாகிறது. விவசாயிகள் டெல்லியில் நுழைந்து கோரிக்கைகளை வைக்க விடாமல் அரசாங்கத்தால் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். விவசாயிகள் 2020-21 ஆம் ஆண்டிலும் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தின் போது பல விவசாயிகள் உயிர் இழந்தனர். இதன் பின்னர் விவசாயிகள் கோரிக்கைப்படி 3 விவசாய சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது. உண்மையிலேயே சுவாமிநாதனை கௌரவிக்கும் விதமாக அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்திருந்தால், அவரது குறைந்த பட்ச ஆதரவு விலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு கிராஸ்டோ தெரிவித்தார்.

The post விவசாயி விரோதப் போக்கை மறைக்கத்தான் ஒன்றிய அரசு சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா வழங்கியுள்ளது: சரத் பவார் கட்சி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Union government ,Bharat ,Sarath Pawar ,party ,MUMBAI ,Nationalist Congress Party ,Sharachandra Pawar Party ,Dr. ,MS Swaminathan ,Delhi ,Swaminathan ,Dinakaran ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...