×

புனே கிராமப்புற பகுதிகளில் போதைப்பொருள் உற்பத்திக்கான புகலிடமாக மாறிய தொழிற்கூடங்கள்: லலித்பாட்டீல் கைதுக்கு பிறகு அம்பலமாகும் அதிர்ச்சி தகவல்கள்

புனே: புனே கிராமப்புற பகுதிகளில் உள்ள தொழிற்கூடங்கள், போதைப் பொருட்கள் தயார் செய்யும் புகலிடமாக செயல்பட்டு வந்துள்ளது என காவல்துறை வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளன. புனே கிராமப்புறங்களில் உள்ள தொழிற்கூடங்கள், சட்டவிரோத போதைப் பொருட்கள் தயாரிக்கும் இடங்களாக செயல்பட்டு வருவது அடுத்தடுத்த கைது நடவடிக்கைகளில் தெரியவந்துள்ளது. பொதுவாக நகர்ப்புறத்துடன் ஒப்பிடுகையில், கிராமப்புற தொழிற்கூடங்களில் அதிகாரிகள் சோதனை செய்வது இல்லை. இதனை சாதகமாக பயன்படுத்தி சிலநிறுவனங்கள் சட்டவிரோதசெயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

அரசால் தடைசெய்யப்பட்ட மருந்துகளைத் தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் எளிதாகக் கிடைப்பதாக கூறப்படுகிறது. போதைப்பொருள் மன்னன் லலித் பாட்டீலின் கைது நடவடிக்கைக்குப் பின்னர் நடைபெற்ற விசாரணையின் போது, பெரும்பாலான குற்றச்செயல்கள் போலீசுக்கே தெரியாமல் கிராமங்களில் சகஜமாக நடந்திருப்பது உயர் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் புனே மாவட்டம், குர்கம்ப் பகுதியில் ரூ.1,327 கோடி மதிப்புள்ள 663 கிலோ எம்டி போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

அதற்கு முன்பாக சோலாப்பூரில் உள்ள ஒரு தொழிற்கூடத்தில் இருந்து 3 கிலோ எம்டி மற்றும் 100 கிலோ மூலப்பொருளையும் போலீசார் கைப்பற்றினர். அதேபோன்று நாசிக் எம்ஐடிசி-யில் இருந்து 133 கிலோ எம்டி பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள், மருந்துப் பொருட்கள் என்ற பெயரில் டெல்லி, லண்டன் மற்றும் பல வெளிநாடுகளுக்கு கூரியர் மூலம் கடத்தப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் எம்ஐடிசி-யில் உள்ள 2 தொழிற்சாலைகளில் இருந்து ரூ.22 கோடி மதிப்புள்ள 150 கிலோ எம்டி-யும், 2020 ஆம் ஆண்டில் ரஞ்சன்கான் எம்ஐடிசியில் சுமார் ரூ.40 கோடி மதிப்புள்ள 20 கிலோ எம்டி-யும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

புனே மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் உள்ள கிராமப்புறங்களில் எந்த அளவிற்கு தடை செய்யப்பட்ட மருந்துகள் மற்றும் போதைப் பொருட்கள் சகஜமாக புழங்கி வந்துள்ளன என்பது ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. கிராமப்புறங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு நாங்கள் சோதனை செய்யச் சென்றாலும், அங்குள்ள ரசாயனப் பொருட்கள் எதற்காக பயன்படுத்தப்படுகின்றன என்பதைச் சரிபார்ப்பது எங்களுக்கு சவாலான காரியமாக உள்ளது. சம்பந்தப்பட்ட துறை நிபுணர்கள் மூலம் விசாரணை நடத்துவதற்குள் குற்றவாளிகள் எளிதாக தப்பி விடுகின்றனர். எனவே புனேயில் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் உள்ள சந்தேகத்திற்கிடமான தொழிற்சாலைகளை கண்காணிக்க எம்ஐடிசி அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம் என காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

The post புனே கிராமப்புற பகுதிகளில் போதைப்பொருள் உற்பத்திக்கான புகலிடமாக மாறிய தொழிற்கூடங்கள்: லலித்பாட்டீல் கைதுக்கு பிறகு அம்பலமாகும் அதிர்ச்சி தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : Pune ,Lalitpatil ,Dinakaran ,
× RELATED மனைவியை ஆதரித்து அஜித் பவார் பிரசாரம்:...