×

திண்டுக்கல், பழநி ரயில்வே ஸ்டேஷன்களில் ரூ.36.85 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள்: பிரதமர் காணொலியில் துவக்கி வைத்தார்

 

திண்டுக்கல், பிப். 27: திண்டுக்கல், பழநி ரயில்வே ஸ்டேஷன்களில் ரூ.36.85 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகளை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 554 ரயில் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள், சுரங்க பாதைகள் மற்றும் 1,500 நடைமேடை பாலங்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. காலை 12.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் திட்டத்தை துவங்கி வைத்தார்.

இதில் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் ரூ.22.85 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகளும் துவங்கப்பட்டன. திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநகராட்சி மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட அம்ரித் பாரத் திட்ட விழிப்புணர்வு கட்டுரை, பேச்சு, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் ரயில்வே ஸ்டேஷன் மேலாளர் கோவிந்தராஜ், கோட்ட வர்த்தக ஆய்வாளர் சத்தியமூர்த்தி, பாஜக மாவட்ட தலைவர் தனபால், இந்திய செஞ்சிலுவை சங்க தலைவர் நாட்டாமை காஜா மைதீன், மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம் மற்றும் திண்டுக்கல் வர்த்தக சங்க நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

பழநி இதேபோல் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பழநி ரயில்வே ஸ்டேஷனில் ரூ.14 கோடி மதிப்பீட்டிலான புனரமைப்பு பணிகளை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். தொடர்ந்து பழநி ரயில்வே ஸ்டேஷனில் நடந்த நிகழ்ச்சியில் மதுரை கோட்ட முதுநிலை பொறியாளர் சூரியமூர்த்தி, மதுரை கோட்ட வணிக பிரிவு உதவி மேலாளர் பாலமுருகன், பழநி நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, டிஎஸ்பி சுப்பையா, பாஜக மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

The post திண்டுக்கல், பழநி ரயில்வே ஸ்டேஷன்களில் ரூ.36.85 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள்: பிரதமர் காணொலியில் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Palani railway ,Modi ,Palani ,Amrit ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்லில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்