×

ரியல் எஸ்டேட் போட்டியில் மாற்றுத்திறனாளி கொலை முன்னாள் எம்.எல்.ஏ ரங்கநாதன் உள்ளிட்ட 11 பேர் விடுதலை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: சென்னை கொளத்தூரை சேர்ந்த மாற்றுத் திறனாளி புவனேஸ்வரன், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த 2012 ஜனவரி 10ம் தேதி மர்ம நபர்களால் அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து, சையது இப்ராகிம், செல்வம், முரளி, குமார் ஆகியோர் மீது விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்நிலையில், வில்லிவாக்கம் தொகுதி தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் தூண்டுதலின்படி தான் தனது மகன் கொலை செய்யப்பட்டதாகவும், குற்றப்பத்திரிகையில் அவரது பெயரை சேர்க்கவில்லை என்பதால், வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று புவனேஸ்வரனின் தந்தை சிவா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், குற்றப்பத்திரிகையில் முரண்பாடுகள் உள்ளதாக கூறி, அதை ரத்து செய்ததுடன், டி.எஸ்.பி., அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி தலைமையில் சி.பி.ஐ விசாரணைக்கு கடந்த 2014ல் உத்தரவிட்டது. அதன்படி விசாரணை நடத்திய சி.பி.ஐ முன்னாள் எம்.எல்.ஏ., ரங்கநாதன், சையது இப்ராகிம், செல்வம், சதீஷ், முரளி, குமார், தணிகாசலம், பாலசந்திரன் உள்பட 12 பேருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.இதில் கே.பாலச்சந்திரன் இறந்துவிட்டதால் மற்ற 11 பேர் மீதான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நேற்று சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி அளித்த தீர்ப்பில், முன்னாள் எம்.எல்.ஏ ரங்கநாதன், உள்ளிட்ட 11 பேர் மீதான குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கப்படாததால் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று உத்தரவிட்டுள்ளார்.

The post ரியல் எஸ்டேட் போட்டியில் மாற்றுத்திறனாளி கொலை முன்னாள் எம்.எல்.ஏ ரங்கநாதன் உள்ளிட்ட 11 பேர் விடுதலை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : MLA ,Ranganathan ,Chennai ,Phuvaneswaran ,Kolathur, Chennai ,Kolathur police ,Syed Ibrahim, ,Selvam ,Dinakaran ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...