×
Saravana Stores

உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் கஞ்சா விற்பனை படுஜோர்

* பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு குறி, பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு, நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?

மாமல்லபுரம்: உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் கஞ்சா விற்பனை படுஜோராக நடந்து வருவதாகவும், இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மாமல்லபுரம் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும், 63வது திவ்ய தேசமான ஸ்ரீ தலசயன பெருமாள் கோயில் உள்ளதால் புகழ் வாய்ந்த கோயில் நகரமாகவும் பார்க்கப்படுகிறது.

மாமல்லபுரம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கல் சிற்பங்கள்தான். இங்கு, பல்லவர் மன்னர்கள் கைவண்ணத்தில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் இன்றைக்கும் கம்பீரமாக நின்று சுற்றுலாப் பயணிகளுக்கு காட்சி தருகிறது. இங்கு, வரும் பயணிகள் இங்குள்ள சிற்பங்களை சுற்றிப்பார்த்து கடற்கரைக்குச் சென்று கடலில் இறங்கி குளித்தும், கடற்கரையில் அமர்ந்தும், நடந்தும் பொழுதை கழிக்கின்றனர்.  சென்னையில், இருந்து 60 கி.மீ. தூரத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் கடற்கரையையொட்டி மாமல்லபுரம் அமைந்துள்ளது.

கடந்த, 7ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள் தங்களது கைவண்ணத்தில் செதுக்கிய அழகிய கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ஜூணன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, புலிக்குகை, கிருஷ்ணா மண்டபம், முகுந்தராயர் மண்டபம், பழைய கலங்கரை விளக்கம், புதிய கலங்கரை விளக்கம், மகிஷாசூரமர்த்தினி, கணேசரதம், திருமூர்த்தி மண்டபம், சீதை தொட்டி ஆகியவை உள்ளன. இவற்றை கண்டு ரசிக்க விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

இதில், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மாதங்கள் மாமல்லபுரத்தை சுற்றிப் பார்க்க சீசன் காலம் என்பதால் ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கார், வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மாமல்லபுரத்துக்கு படையெடுக்கின்றனர். இவ்வாறு சிறப்பு வாய்ந்த மாமல்லபுரத்தில் கஞ்சா விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. மாமல்லபுரம் கஞ்சா விற்கும் போதை நகரமாக மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள், ஆன்மிகவாதிகள், உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதில், மாமல்லபுரம் மீனவர் பகுதி, கடற்கரை, ஒத்த வாடை தெரு, ஐந்து ரதம், அண்ணாநகர், பூஞ்சேரி கூட்ரோடு, பூஞ்சேரி அடுக்குமாடி குடியிருப்பு, தேவனேரி, எச்சூர் காடு, பையனூர், மாமல்லபுரம் பக்கிங்காம் மேம்பாலம், பட்டிப்புலம் பக்கிங்காம் கால்வாய், பேரூர், தெற்குபட்டு சவுக்குத் தோப்பு, திருவிடந்தை உள்ளிட்ட பகுதிகளில் சந்து, பொந்துகளில் எல்லாம் கஞ்சா பொட்டலங்களை கூவிக்கூவி அமோகமாக விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது. அதேபோல், திருப்போரூர் பகுதியில் இருந்து கோவளத்திற்கு கொண்டு வந்து கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

வட மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் ஆந்திராவுக்கு வந்து, அங்கிருந்து தமிழகத்தின் எல்லைப் பகுதிக்கு வந்து, புரோக்கர்கள் மூலம் மாமல்லபுரத்திற்கு மொத்தமாக அனுப்பாமல், சில்லறையாக பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது. கஞ்சா, விற்பவர்களை மாமல்லபுரம் போலீசார் பிடித்து வழக்குப் பதிந்து சிறையில் அடைத்தாலும், 4 அல்லது 5 நாட்களில் வெளியே வந்து போலீசாருக்கு தெரிந்தே மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுகின்றனர்.

மேலும், மாமல்லபுரத்திற்கு வந்தால் எந்த நேரமும் சகலமும் கிடைக்கும் என நினைத்து இளைஞர்கள், இளம் பெண்கள் தினமும் இரவு 11 மணிக்கு விலை உயர்ந்த கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து இங்குள்ள ஓட்டல், ரெஸ்டாரன்ட், தங்கும் விடுதிகளில் தங்கி சகலமும் அனுபவித்துச் செல்கின்றனர். அப்படி, வருபவர்கள் கடற்கரையையொட்டி உள்ள ரெஸ்டாரன்ட், ரிசார்ட்களை தேர்ந்தெடுத்து தங்குகின்றனர். அதேபோல், கஞ்சா விற்பவர்களுக்கு அரசியல்வாதிகள் முதல் பல்வேறு அரசு துறை சார்ந்த உயரதிகாரிகள் மற்றும் பிரபல முன்னணி ரவுடிகள் நெருக்கமாக இருப்பதால் காட்டிக் கொடுக்க பொதுமக்கள் பயப்படுகின்றனர்.

இது ஒருபுறமிருக்க பிரபல ரவுடிகள், பிரபல கஞ்சா வியாபாரிகள் பல்வேறு வழக்குகளில் இருந்து தப்பித்து, போலீஸ் உயரதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க இசிஆர் சாலையில் உள்ள ரிசார்ட்டுகளில் வந்து தஞ்சம் அடைந்து விடுகின்றனர். அப்படி, வந்து தங்கும் ரவுடிகளுக்கு பயன்படுத்த கஞ்சாவும், இளம் பெண்களும் சப்ளை செய்யப்படுகிறது. அதற்கு, மாமல்லபுரத்தில் ஒரு கும்பலே சுற்றி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, மாமல்லபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் சுற்றுலா வரும் பயணிகளை குறிவைத்து கஞ்சா சகலமாக விற்கப்பட்டு வருகிறது.

இதனால், மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க வரும் பயணிகளை விட, கஞ்சாவை வாங்கி புகைப்பவர்கள் அதிகளவில் வருவதாக உள்ளூர் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், கஞ்சாவுக்கு போட்டியாக மாமல்லபுரத்தில் 3 நம்பர் லாட்டரி சீட்டும் வெளிப்படையாக விற்கப்படுகிறது. 3 நம்பர் லாட்டரி சீட்டில் கடைசி ஒரு இலக்கம் இருந்தால் 100 ரூபாய், 2 இலக்கம் இருந்தால் 1000 ரூபாய், 3 இலக்கம் இருந்தால் 25,000 ரூபாய் பரிசு என ஏழை கூலித் தொழிலாளர்களைக் குறிவைத்து மாமல்லபுரத்தில் பல்வேறு இடங்களில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

ரூ.30, ரூ.60, ரூ.120 என்ற விலையில் ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட ரூ.50 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்று வருகிறது. அதேபோல், புதுச்சேரியில் இருந்து கடலில் படகு மூலம் மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டு, இங்கு கடற்கரையையொட்டி உள்ள ரெஸ்டாரன்ட்களில் கள்ளத்தனமாக பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். கஞ்சா விற்பனை, 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை, கள்ளத்தனமான மது விற்பனை குறித்து பல்வேறு புகார்கள் மாமல்லபுரம் போலீசாருக்கு சென்றாலும், சம்பந்தப்பட்டவர்களிடம் போலீசார் பெரிய அளவிலான கையூட்டு பெற்றுக்கொண்டு கண்டும் காணாதது போல் அலட்சியமாக செயல்படுகின்றனர்.

* விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. கஞ்சாவை சின்னச்சின்ன பொட்டலங்களாக மடித்து வைத்து விற்பனை செய்கின்றனர். வட மாநிலத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வந்து அங்கிருந்து வியாபாரிகள் மூலம் மாமல்லபுரம் அனுப்பி வைக்கப்படுகிறது. இங்குள்ள, புரோக்கர்களிடம் வந்து சேர்ந்த பிறகு அவர்களிடமிருந்து இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகளவில் கஞ்சாவை வாங்கி பயன்படுத்துவதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது.

மாமல்லபுரத்தைச் சுற்றி பல்வேறு அரசுப் பள்ளிகள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் உள்ளன. இங்குள்ள, கல்லூரிகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்லூரி விடுதிகளிலும், 3 அல்லது 5 மாணவர்கள் சேர்ந்து அறையை வாடகை எடுத்தும் தங்கி படித்து வருகின்றனர். குறிப்பாக, பள்ளி – கல்லூரி மாணவர்கள், சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து கஞ்சா விற்கப்படுகிறது. இதனால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் அதிகளவில் நடக்கிறது.

கஞ்சா புகைப்பதால் நுரையீரல் பாதிப்பு மற்றும் வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், வயிற்று சம்பந்தமான பிரச்னைகள், உடல் சோர்வு ஆகியவை ஏற்படுகிறது. கஞ்சாவை, புகைத்து விட்டு நீண்ட நேரம் கழித்து வீட்டிற்கு செல்லும்போது எந்தவித மாற்றமும் தெரியாது என்பதால் பெற்றோராலும் அதனை கண்டுபிடிக்க முடியாது. போலீஸ் உயரதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி அனைத்து பள்ளி – கல்லூரி மாணவ – மாணவிகளுக்கும், மாமல்லபுரம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’ என்றனர்.

* கஞ்சா நகரமாக மாறும் நிலை
இதேநிலை தொடர்ந்து நீடித்தால் மாமல்லபுரம் உலகப்புகழ் பெற்ற சுற்றுலா நகரம் என்ற பெயர் மாறி, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்கும் நகரமாக மாறும் நிலை வந்துவிட்டது என உள்ளூர் மக்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் புலம்பி தள்ளுகின்றனர். எனவே, செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி.சாய்பிரணீத் காலம் தாழ்த்தாமல் உடனடியாக தலையிட்டு மாமல்லபுரத்தில் கஞ்சா விற்பனை, 3 நம்பர் சீட்டு விற்பனை மற்றும் கடற்கரையையொட்டி உள்ள ரெஸ்டாரன்ட்டில் கள்ள மது விற்பனையில் ஈடுபடுபவர்களை பிடித்து குண்டாசில் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் கஞ்சா விற்பனை படுஜோர் appeared first on Dinakaran.

Tags : Ganja sale Padujor ,Mamallapuram ,
× RELATED மாமல்லபுரம் பஞ்ச பாண்டவர்...