×

மாமல்லபுரத்தில் வடிவமைக்கப்பட்ட 27 அடி உயர பிரமாண்ட மரத்தேர்: தெலங்கானாவுக்கு அனுப்பிவைப்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த பெருமாளேரியில் உள்ள மானசா மரச்சிற்பக்கலை கூடத்தில், மாமல்லபுரம் அரசினர் சிற்பக்கலை கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற சிற்பக்கலைஞர் ரமேஷ் ஸ்தபதி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் சிற்பக்கலைஞர்கள் உதவியுடன் 27 அடி உயரத்தில், 16 அடி நீளம் மற்றும் 13 அடி அகலத்தில் மரத்தேர் அழகுர வடிவமைக்கப்பட்டது. இந்த, மரத்தேர் தெலங்கானா மாநிலம் புவனகிரியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஷ்வரா பெருமாள் கோயிலுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த, 6 மாதமாக 50க்கும் மேற்பட்ட சிற்பக்கலைஞர்கள் இந்த மரத்தேரினை அழகுர வடிவமைத்தனர். இந்த, மரத்தேர் 8 தூண்களுடன் தேரின் முன் பகுதியில் நான்கு வேதங்களை குறிக்கும் வகையில் 4 குதிரை சிற்பங்களுடன், பிரம்மாவை தேரோட்டியாக அமைத்து அவரது உருவம் தாங்கிய சிற்பத்துடன் கலை நயத்துடன் வடிவமைப்பட்டுள்ளது. மேலும், தூண்களில் 32 துவார பாலகர் சிற்பங்கள், 4 முனைகளில் கருடன் சிற்பங்கள் காட்சியளிக்கின்றன. தேர் முழுவதும் 800 கன அடி தேக்கு மரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த, தேரின் முழு எடை 13 டன் ஆகும்.

குறிப்பாக வைணவ ஆகமத்தை பின்பற்றி பெருமாள் கோயில்களுக்காக மகாரதம் என அழைக்கப்படும் 27 அடி முதல் 90 அடி வரையிலான பெரிய மரத்தேர்கள் பெரும்பாலும் கோயில் வளாகத்தில்தான் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. முதல் முறையாக கோயில் வளாகத்தில் வடிவமைப்பதை தவிர்த்து, குறுகிய 6 மாத காலத்தில் மாமல்லபுரம் அடுத்த பெருமாளேரியில் உள்ள மரச்சிற்ப கூடத்தில் வடிவமைக்கப்பட்ட பெரிய மரத்தேர் இதுவாகும். இந்த மரத்தேர் தனித்தனியாக பிரித்து எடுக்கப்பட்டு கண்டெய்னர் லாரி மூலம் தெலங்கானா மாநிலம், புவனகிரி நகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இத்தேரினை வடிவவைத்த ரமேஷ் ஸ்தபதி அயோத்தி ராமர் கோயிலுக்கு 48 மரக்கதவுகள் மற்றும் பல்லக்கு வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மாமல்லபுரத்தில் வடிவமைக்கப்பட்ட 27 அடி உயர பிரமாண்ட மரத்தேர்: தெலங்கானாவுக்கு அனுப்பிவைப்பு appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Telangana ,Manasa Wood Sculpture Gallery ,Perumaleri ,Ramesh Sthapathi ,Mamallapuram Government College of Sculpture ,
× RELATED மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்; 7 அடி உயரம் எழுந்த அலைகள்: மீனவர்கள் அச்சம்