×

சென்னை மெரினா கடற்கரையில் புதுப்பொலிவுடன் அண்ணா, கலைஞர் நினைவிடம் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து பொதுமக்கள் பார்வைக்காக அர்ப்பணித்தார்

சென்னை: மெரினா கடற்கரையில் பிரமாண்டமான முறையில் கலைநயத்துடன் கட்டப்பட்ட அண்ணா, கலைஞரின் நினைவிடங்களை பொதுமக்கள் பார்வைக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். நினைவிட வளாகத்தின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த அண்ணா மற்றும் கலைஞரின் சிலைகளையும் திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். உலகத் தமிழினத்தின் மிக உயர்ந்த தலைவராக திகழ்ந்த அண்ணா 1969 பிப்.3ம் தேதி மறைந்த பின் அவருக்கு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் மிகச் சிறந்த கட்டிடக் கலை வடிவமைப்புடன் கலைஞரால் நினைவிடம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வராக 19 ஆண்டு காலம் நல்லாட்சி புரிந்து, தமிழ்நாட்டை வளப்படுத்தி, தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, நவீன தமிழ்நாட்டின் சிற்பியாக விளங்கி, உலக வரலாற்றில் உன்னத புகழ்ச் சின்னமாகத் திகழும் கலைஞர் தன்னுடைய 95ம் வயதில் 2018ம் ஆண்டு மறைந்து அண்ணா நினைவிடம் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்.

இதை தொடர்ந்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி, உலகெங்கிலும் தமிழர்களுக்கெல்லாம் தமிழினத் தலைவர், இலக்கியத் துறையைச் சார்ந்தவர்களுக்கெல்லாம் முத்தமிழறிஞர், கலையுலகத்தினருக்கு என்றும் கலைஞர், தமிழ்நாட்டின் தலைவர்களுக்கெல்லாம் தலைவர், இந்திய அரசியலை வழிநடத்திய அரசியல் ஞானி, “என் பாதை, சுயமரியாதைப் பாதை, தமிழின நலன் காக்கும் பாதை, தமிழ் நெறி காக்கும் பாதை, பெரியாரின் பாதை, அண்ணாவின் பாதை – அறவழிப் பாதை – அமைதிப் பாதை, ஜனநாயகப் பாதை இதில் பயணித்தால் மரணமே வரும் எனப் பயமுறுத்தினாலும், அந்தப் பாதையிலிருந்து மாற மாட்டேன்” என இறுதிவரை உறுதியோடு வாழ்ந்தவர்தான் கலைஞர்.

80 ஆண்டு பொதுவாழ்க்கை, 70 ஆண்டுகள் திரைத்துறை, 70 ஆண்டுகள் பத்திரிகையாளர், 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர், 50 ஆண்டுகள் திமுக தலைவர் என்று வாழ்ந்த காலம் முழுவதும் வரலாறாக வாழ்ந்தவர் கலைஞர். அதேபோல், நின்ற தேர்தலில் எல்லாம் வென்றவர், இந்தியாவில் இப்படி ஒருவர் இருந்தது கிடையாது; இனி ஒருவர் அவர் இடத்தை அரசியல் களத்தில் பிடிக்க முடியாது என்று போற்றத்தக்கப் பெருமைக்குரியவர். தாய் தமிழ்நாட்டை உருவாக்கிய தமிழினத் தலைவர் கலைஞர் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றும் விதமாக, அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை மக்களும், வருங்காலத் தலைமுறையும் அறியக்கூடிய வகையில், நவீன விளக்கப் படங்களுடன் அண்ணா நினைவிட வளாகத்தில் கலைஞருக்கும் நினைவிடம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதனடிப்படையில், அண்ணா, கலைஞரின் நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நினைவிடங்களை பொதுமக்கள் பார்வைக்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 7 மணிக்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் எ.வ.வேலு வரவேற்றார். பின்னர் சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள நினைவிடங்களின் முகப்பு வாயிலில் அண்ணா நினைவிடம், கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் அழகுறப் பொறிக்கப்பட்டுள்ளதை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதன்பின்னர், அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞர் நினைவிடங்களை தலைவர்களுடன் சென்று பார்வையிட்டார். நினைவிட நுழைவாயிலை கடந்து உள்ளே செல்லும் வழியில் அண்ணா படிப்பது போன்ற சிலையும், வலதுபுறம் இளங்கோவடிகள் மற்றும் இடதுபுறம் கம்பர் சிலைகளும், நினைவிடங்களின் முன்பகுதி இரு புறங்களிலும் பழமையான புல் வெளிகளும், இடப்புறத்தில் அண்ணா அருங்காட்சியமும் அமைந்துள்ளன. “எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது” எனப் பொறிக்கப்பட்டுள்ள அண்ணாவின் துயில்கொள்ளும் சதுக்கத்தைக் கடந்து சென்றவுடன், கலைஞர் அமர்ந்து எழுதும் வடிவிலான சிலையும், முத்தமிழறிஞர் கலைஞர் சதுக்கமும் அமைந்துள்ளன.

அதேபோல் இந்த சதுக்கத்தில், “ஓய்வெடுக்காமல் உழைத்தவர் இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்” எனும் வாசகம் கலைஞரின் எண்ணப்படியே பொறிக்கப்பட்டுள்ளது. கலைஞர் சதுக்கத்தின் முன்னே இருபுறமும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழ்ச் செம்மொழி என ஒன்றிய அரசு ஏற்ற முடிவை தெரிவித்துப் பாராட்டி, கலைஞருக்கு எழுதிய கடிதம் ஆங்கிலத்திலும், தமிழிலும் புத்தக வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், சதுக்கத்தின் பின்புறம் கலைஞரின் புன்னகை பூத்த முகம் பொன்னிறத்தில் மிளிரும் வண்ணமும் சுற்றிலும் மின்விளக்குகள் விண்மீன்களாக ஒளிரும் வண்ணமும் அமைக்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமல்லாது, கலைஞரின் சதுக்கத்தின் கீழே நிலவறைப் பகுதியில், கலைஞர் உலகம் எனும் பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, கலைஞர் நிர்மாணித்த திருவள்ளுவர் சிலை, குடிசை மாற்றுவாரியம் முதலியவை படங்களாகவும், தமிழ்த்தாய் வாழ்த்தும், தமிழ்த்தாய் வாழ்த்து அரசு நிகழ்ச்சிகளில் பாடப்பட வேண்டும் என்று கலைஞர் கடந்த 1970ம் ஆண்டு நவ.23ம் தேதி பிறப்பித்த அரசாணையும், தமிழ்த் தாய் வாழ்த்து மாநிலப் பாடல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ம் ஆண்டு டிச.17ம் தேதி பிறப்பித்த அரசாணையும் அவர்களின் படங்களுடன் இடம்பெற்றுள்ளன.

கலைஞரின் இளமைக் காலம் முதல், அவர் வரலாற்றில் இடம் பெற்ற நிகழ்வுகள், கலைஞரின் படைப்புகள், அவர் சந்தித்த போராட்டங்கள், நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் தொடர்பான புகைப் படங்கள் கலைஞரின் எழிலோவியங்கள் எனும் அறையில் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், இந்த சதுக்கத்தில் கலைஞர் எழுதிய நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதுடன், வரும் வழியில் தமிழர்களின் கலாச்சார மையம், வள்ளுவர் கோட்டம், பாம்பன் பாலம், ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முகப்புக் கட்டிடம், மெட்ரோ ரயில், அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகிய கலைஞர் படைத்த நவீனங்களின் தோற்றம் வண்ண விளக்கொளியில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கலைஞரின் பொன்மொழிகள் கற்பாறைகளில் தமிழிலும் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டு நம் இதயத்திலும் பதியும் வண்ணம் அருமையாக அமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய சிறப்பு மிக்க அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, சாமிநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்பி தயாநிதி மாறன் உள்ளிட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தி.க. தலைவர் கி. வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், பாமக சட்டமன்ற கட்சித் தலைவர் ஜி.கே.மணி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, பொதுப்பணித் துறை செயலாளர் சந்தர மோகன், பல்வேறு அரசு துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

The post சென்னை மெரினா கடற்கரையில் புதுப்பொலிவுடன் அண்ணா, கலைஞர் நினைவிடம் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து பொதுமக்கள் பார்வைக்காக அர்ப்பணித்தார் appeared first on Dinakaran.

Tags : Anna ,Chennai Marina ,Artist Memorial Inauguration ,Principal ,M. K. Stalin ,Chennai ,Marina beach ,K. Stalin ,
× RELATED அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சம்மர் கேம்ப்