×

பாஜ ஐடி பிரிவு தொடர்ந்த வழக்கு அவதூறு வீடியோவை ரீட்வீட் செய்து தவறு செய்துவிட்டேன்: உச்ச நீதிமன்றத்தில் பின்வாங்கிய கெஜ்ரிவால்

புதுடெல்லி: பாஜ தகவல் தொழில்நுட்பப் பிரிவு தொடர்பாக, யூடியூபர் துருவ் ரதி பரப்பிய அவதூறு வீடியோவை மறு ட்வீட் செய்து தவறு செய்துவிட்டதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஜெர்மனியில் வசிக்கும் ரதி என்பவர் ‘பாஜ ஐடி செல் பார்ட்-2’ என்ற தலைப்பில் யூடியூப் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பரப்பு அவதூறு ஏற்படுத்தினார். இதன் உண்மை தன்மையை ஆராயாமல் அதை முதல்வர் கெஜ்ரிவால் மறுட்விட் செய்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜவை சேர்ந்த சாங்க்ரித்யாயன் என்பவர் கெஜ்ரிவாலுக்கு எதிராக அவதூறு வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த 5ம் தேதி பிறப்பித்த உத்தரவில் அவதூறானவற்றை மீண்டும் வெளியிடுவது அவதூறு சட்டத்தின் படி தவறு இழத்ததாக கருதப்படும். தனக்குத் தெரியாத உள்ளடக்கத்தை ரீட்வீட் செய்யும்போது பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டியது அவசியம். அவதூறான உள்ளடக்கத்தை மறு ட்வீட் செய்தால் தண்டனை, சிவில் வழக்கு போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டியது கட்டாயமாகும் என உத்தரவிட்டது. எனினும், உயர் நீதின்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்மனை உறுதி செய்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீது நோட்டீஸ் வழங்காமல், முதல்வர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதன் மூலம் இந்த வழக்கை முடிக்க விரும்புகிறீர்களா என்று நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு புகார்தாரரிடம் கேட்டது. இதற்கு பதிலளித்த கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, “ரீட்வீட் செய்து தவறு செய்துவிட்டேன் என்று இவ்வளவுதான் சொல்ல முடியும்” என கெஜ்ரிவால் சார்பில் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கை மார்ச் 11ம் தேதி வரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனர்.

The post பாஜ ஐடி பிரிவு தொடர்ந்த வழக்கு அவதூறு வீடியோவை ரீட்வீட் செய்து தவறு செய்துவிட்டேன்: உச்ச நீதிமன்றத்தில் பின்வாங்கிய கெஜ்ரிவால் appeared first on Dinakaran.

Tags : BJP ,Kejriwal ,Supreme Court ,New Delhi ,Delhi ,Chief Minister ,Dhruv Rathi ,Rathi ,Germany ,
× RELATED அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில்...