×

தலைநகர் டெல்லி நோக்கி விவசாயிகள் டிராக்டர் பேரணி: யமுனா விரைவுச்சாலையில் பரபரப்பு

சண்டிகர்: பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் பஞ்சாப், அரியானா எல்லையில் முகாமிட்டுள்ள நிலையில், உத்தரப்பிரதேசத்தில் இருந்து தலைநகர் டெல்லி நோக்கி நூற்றுக்கணக்கான விவசாயிகள் டிராக்டரில் பேரணியாக புறப்பட்டதால் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் பெரும் பரபரப்பு நிலவியது. குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி டெல்லி செல்லும் ‘டெல்லி சலோ’ போராட்டத்தை தொடங்கிய பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் அம்மாநில எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். போராட்ட களத்தில் அரியானா போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ரப்பர் குண்டு பாய்ந்து 21 வயது விவசாயி ஒருவர் பலியானார். இதனால் பதற்றம் ஏற்பட்ட நிலையில், விவசாயிகள் வரும் 29ம் தேதி வரை டெல்லி செல்லும் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். ஆனால் தொடர்ந்து எல்லையில் முகாமிட்டுள்ள அவர்கள் தினமும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், உலக வர்த்தக அமைப்பிற்கு எதிராக நேற்று போராட்டம் நடத்தினர். உலக வர்த்தக அமைப்பிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கைகளில் ஒன்று. எனவே, ‘வெளியேறு உலக வர்த்தக அமைப்பு தினம்’ என்ற பெயரில் நேற்று பிற்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை நெடுஞ்சாலைகளில் டிராக்டர்களை நிறுத்தி எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம் நடத்தனர். பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பல்வேறு நெடுஞ்சாலைகளில் சென்டர் மீடியனை ஒட்டி விவசாயிகள் டிராக்டரை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பஞ்சாப்பில் ஹோஸியார்பூர், ஜலந்தர்-ஜம்மு நெடுஞ்சாலை, அமிர்தசரஸ், லூதியானா-சண்டிகர் நெடுஞ்சாலை மற்றும் அரியானாவில் ஹிசார் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏராளமான விவசாய சங்க உறுப்பினர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, பஞ்சாப்-அரியானா மாநில எல்லைகளான ஷம்பு, கானவுரி பகுதிகளில் உலக வர்த்தக அமைப்பின் பிரமாண்ட உருவ பொம்மையை எரித்து விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதற்கிடையே, உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பல்வேறு விவசாயிகள் தலைநகர் டெல்லி நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். அவர்கள் யமுனா விரைவுச்சாலை, லுஹர்லி டோல் பிளாசா, மகாமயா மேம்பாலம் வழியாக டிராக்டர் பேரணி போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இதனால் நொய்டா போலீசார் போக்குவரத்தை மாற்றி வாகன ஓட்டிகளை எச்சரித்திருந்தனர். பல பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைத்து சோதனை மேற்கொண்டனர். விவசாயிகள் அறிவித்தபடியே, உபி மாநிலம் கவுதம்புத்தா நகரில் இருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் யமுனா விரைவுச்சாலையில் டிராக்டரில் பேரணியாக புறப்பட்டனர். இதனால் நெடுஞ்சாலை முழுவதும் விவசாயிகளின் டிராக்டரால் நிரம்பியது. அதே சமயம், சாலையின் நுழைவுப்பகுதியில் தடுப்பு அரண்களை அமைத்திருந்த போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். விவசாயிகளின் டிராக்டர் பேரணியால் யமுனை விரைவுச்சாலையில் பரபரப்பு நிலவியது. அதோடு, டெல்லி-உபி எல்லையிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

The post தலைநகர் டெல்லி நோக்கி விவசாயிகள் டிராக்டர் பேரணி: யமுனா விரைவுச்சாலையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Yamuna ,Expressway ,riots ,Chandigarh ,Punjab ,Ariana ,Yamuna Expressway ,Uttar Pradesh ,
× RELATED குஜராத்தில் கார் மீது லாரி மோதி 10 பேர் பலி