×

மண்டியா தொகுதியை விட்டுக்கொடுக்க மாட்டேன்: சுமலதா உறுதி

பெங்களூரு: மண்டியா அம்பரீஷ் நாடு, அவர் இம்மண்ணின் மைந்தர். அவர் வாழ்ந்த மண்ணில் இருந்து நான் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை விரும்புவதால் தொகுதியை யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன் என்று நடிகை சுமலதா தெரிவித்தார். செய்தியாளர்களிடம் சுமலதா கூறும்போது, கடந்த ஐந்தாண்டுகளாக மண்டியா தொகுதி எம்பியாக இருந்து தொகுதி வளர்ச்சிக்காக செய்துள்ள பணிகளை ஆதரவாளர்களிடம் தெரிவித்தேன். கடந்த 2019ல் நடந்த தேர்தலின் போது எனது வெற்றிக்கு நடிகர் தர்ஷன் காரணமாக இருந்தார். வரும் தேர்தலிலும் அவர் எனக்கு பக்கபலமாக இருப்பேன் என்று கூறியுள்ளார். நடிகர் யஷ் ஆதரவும் எனக்கு உள்ளது. தற்போது சூட்டிங் விஷயமாக லண்டன் சென்றுள்ளார். நாடு திரும்பியதும் அவரிடம் ஆலோசிப்பேன்.

கடந்த தேர்தலில் நான் பாஜ ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிட்டேன். கட்சி பேதமில்லாமல், அம்பரீஷ் மீது வைத்திருந்த பாசத்தின் காரணமாக அனைவரும் ஆதரித்து வெற்றி பெற செய்தீர்கள். மண்டியாவில் தாமரை கொடி பறக்க வேண்டும் என்பது பலரின் விருப்பமாக உள்ளது. தேர்தலில் போட்டியிட சீட் கொடுப்பது என்பது ஒரு கூட்டத்தில் முடிவாகும் விஷயமல்ல. தற்போது இரு கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளதால், பேச்சுவார்த்தை பல சுற்று நடக்கும். மண்டியா தொகுதி பாஜவுக்கு என்றால் முதல் வாய்ப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நான் மண்டியா தொகுதியை விட்டு கொடுக்க வேண்டும் என்பது குறித்தே, அதற்கு பதிலாக பெங்களூரு வடக்கு தொகுதி அல்லது மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்வது தொடர்பாக யோசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. எனக்கு பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிட விரும்பமில்லை. எனது கணவர் வாழ்ந்து, அரசியல் செய்த மண்டியா தொகுதியில் மட்டுமே போட்டியிடுவேன். யாருக்காவும் எதற்காகவும் தொகுதியை விட்டு கொடுக்க மாட்டேன் என்பதில் உறுதியாக உள்ளேன் என்றார்.

* மஜதவுக்கு தான் மண்டியா: நிகில் குமாரசாமி நம்பிக்கை

ராமநகர் தாலுகாவின் கேத்தகானஷள்ளி அருகில் உள்ள முன்னாள் முதல்வர் குமாரசாமியின் பார்ம் ஹவுசில் உள்ளூர் தலைவர்கள் கூட்டம் நடந்தது. இதற்கு முன்னதாக எம்எல்ஏ ஜி.டி.தேவகவுடா பேசியதாவது: மக்களவை உறுப்பினர் சுமலதா அதிகாரப்பூர்வமான பாஜ உறுப்பினர் அல்ல. ஆனாலும் அவர் போட்டியிட வாய்ப்பு கேட்பதில் தவறில்லை. மண்டியா தொகுதியை கேட்டால் பெங்களூரு வடக்கு தொகுதி கொடுக்கலாம் என்ற கணக்கு இருக்கலாம். சிலர் இதை என்னிடம் கூறி வருகின்றனர் என்றார். அதேபோல், மஜத இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமி கூறியதாவது: வேட்பாளர் தேர்வு குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. மண்டியா மாவட்டத்தில் மஜதவுக்கு 5.5 லட்சம் வாக்குகள் உள்ளது. இதனால், மண்டியா தொகுதியை தக்கவைத்து கொள்ள வேண்டும் என கட்சியின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எங்களுடைய விருப்பத்தையும் பாஜ மேலிடத்திற்கு தெரிவித்துள்ளோம் என்றார்.

The post மண்டியா தொகுதியை விட்டுக்கொடுக்க மாட்டேன்: சுமலதா உறுதி appeared first on Dinakaran.

Tags : Mandya ,Sumalatha ,Bengaluru ,Ambareesh ,
× RELATED பிரசாரத்திற்கு பாஜ, சுமலதா ஒத்துழைக்கவில்லை: தேவகவுடா வேதனை