×

108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் காஞ்சி ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ புஷ்ப வல்லித்தாயார் சமேத ஸ்ரீ அஷ்டபுஜப் பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக ஸ்ரீ அஷ்டபுஜப் பெருமாள் கோயில் உள்ளது. மூலவர் அஷ்டபுஜப்பெருமாள் 8 கரங்களுடன் காட்சியளிப்பது காஞ்சிபுரத்தில் உள்ள இந்த அஷ்டபுஜப் பெருமாள் திருக்கோயிலில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அதனாலேயே இக்கோயிலுக்கு அஷ்டபுஜ (எட்டு கைகள்) பெருமாள் கோயில் என்று பெயர் வைக்கப்பட்டது.

இக்கோயிலில் கடந்த 9.12.2021ம் ஆண்டு பாலாலயம் நடத்தப்பட்டு புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவையொட்டி ஆலய வளாகத்தில் 5 ஹோம குண்டங்கள், 8 கலச ஸ்தாபன ஸ்தானங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் கடந்த 23ம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் மூலவருக்கு 108 கலச சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் திவ்ய பிரபந்தம் பாடினார்கள்.  இதனைத் தொடர்ந்து நேற்று மகா கும்பாபிஷேக விழா காலை 6.30 மணிக்கு கோலாகலமாக நடைபெற்றது.

மகா பூரணாகுதி தீபாராதனைக்குப் பிறகு மூலவர், தாயார் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் ‘கோவிந்தா… கோவிந்தா…’ என கோஷமிட்டு பெருமாளை தரிசித்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சிறப்புத் திருமஞ்சனமும் நடைபெற்றது. மாலையில் உற்சவர் ஆதிகேசவப் பெருமாள், புஷ்பவல்லி தாயார் ஆகியோர் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுவின் தலைவர் சந்தோஷ்குமார், மாமன்ற உறுப்பினர் கார்த்திக், கோயில் செயல் அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

கும்பாபிஷேக விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு, காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மல், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவின் மனைவி சாந்தி, அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்தன் பாரதி, உத்திரமேரூர் எம்எல்ஏ.க. சுந்தர், காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், மண்டலக்குழு தலைவர் சாந்தி சீனிவாசன், மாநகரச் செயலாளர் தமிழ்ச்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் திருப்பணி குழு நிர்வாகிகள் சுப்ரமணியன், சுப்பராயன், ஏகாம்பரநாதர் கோயில் அறங்காவலர் உறுப்பினர் ஜெகநாதன், மாமன்ற உறுப்பினர் கார்த்திக் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

The post 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் காஞ்சி ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Maha ,Kumbabhishekam ,Kanchi Sri Ashtabhuja Perumal Temple ,Sami ,Kanchipuram ,Maha Kumbabhishekam ,Sri Pushpa Vallithayar Sametha Sri ,Ashtabhuja Perumal temple ,Sri Ashtabhuja Perumal Temple ,Perumal ,Ashtabhuja ,Kanchi Sri ,Perumal Temple ,Sami Darshan ,
× RELATED 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன்...