×

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 465 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.

இதில், நிலம் சம்பந்தமாக 127 மனுக்களும் சமூக பாதுகாப்புதிட்டம் தொடர்பாக 69 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 94 மனுக்களும் பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 78 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சார்பாக 97 மனுக்களும் என மொத்தம் 465 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

பின்னர் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.7,900 மதிப்பில் சக்கர நாற்காலியும், ஆவடி வட்டம் நடுகுத்தகை கிராமம் திருநின்றவூரில் வசிக்கும் சுதந்திர போராட்ட தியாகி சாந்தா, சுப்ரமணியம் தம்பதியினரின் மகன் ரமேஷ் என்பவருக்கு ஆட்டோ வாங்குவதற்காக மாவட்ட கலெக்டர் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்திற்கான காசோலையினை ஆக மொத்தம் 2 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 27 ஆயிரத்து 900 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் வழங்கினார்.

இந்த கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) என்.ஓ.சுகபுத்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், தனி துணை ஆட்சியர் (சபாதி) வி.கணேசன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன் மற்றும் பல்வேறு சார்ந்த உயர் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : People's Grievance Redressal Day ,Thiruvallur ,Grievance Day ,District Collector's Office ,District Collector ,T. Prabhu Shankar ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...