×

கூலி உயர்வை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட நெசவாளர்கள் கைது

பள்ளிப்பட்டு: கூலி உயர்வு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட முயன்ற நெசவாளர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு மற்றும் திருத்தணி ஆகிய பகுதிகளை சேர்ந்த விசைத்தறி நெசவாளர்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூலி உயர்வை வலியுறுத்தி 16 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருத்தணி கோட்டாட்சியர் தீபா தலைமையில் 2 கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூக முடிவு எட்டப்படாத நிலையில், நெசவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலையின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நெசவாளர்கள் லுங்கி மீட்டர் ஒன்றுக்கு ரூ.10 உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இறுதியாக ரூ.5 உயர்த்தினால் போராட்டம் கைவிடப்படும் என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும் அதிகபட்சமாக ரூ.3 வரை உயர்த்த விசைத்தறி ஏஜெண்டுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்திமாஞ்சேரிப்பேட்டையை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அவர்களில் 25 பேரை போலீசார் கைது செய்து ஆர்.கே.பேட்டையில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த நெசவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்ட நெசவாளர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று முற்றுகையிட்டு தங்களையும் கைது செய்ய வேண்டும் என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து மாலை 5 மணிக்கு கைது செய்யப்பட்ட நெசவாளர்கள் விடுவிக்கப்பட்டனர்.

The post கூலி உயர்வை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட நெசவாளர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Pallipattu ,RK Pettai ,Pallipatta ,Tiruthani ,Tiruvallur ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை