சென்னை: நடிகைகளையும், தன்னையும் தொடர்புபடுத்தி பேசியதால் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி ராஜு ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அதிமுக சேலம் மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி ராஜு கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை த்ரிஷா, நடிகர் கருணாஸ் குறித்தும் மற்றும் அதிமுக சேலம் மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. இதற்கு பலர் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஏ.வி ராஜு ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அதிமுக சேலம் மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம் வழக்கு தொடர்ந்துள்ளார். “எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் தெரிவித்த இந்த குற்றச்சாட்டுகள் காரணமாக, இத்தனை ஆண்டுகளாக பொது வாழ்வில் சேர்த்து வைத்திருந்த நற்பெயருக்கு ராஜு களங்கம் ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டுமென ஜெயலலிதா கற்றுக்கொடுத்துள்ளார். அதிமுகவில் இத்தனை ஆண்டுகள் இருந்த ஏ.வி. ராஜூ இதனை மறந்து பெண்ணுக்கு எதிரான கருத்தை கூறியுள்ளார். பெண்கள் ஆதரவு அதிமுகவுக்கு இருந்தது.
ராஜூவின் பேச்சால் தற்போது அந்த ஆதரவு பாதிக்கப்பட்டுள்ளது. ராஜூவின் இந்த பேச்சால் தனது நற்பெயருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு, நஷ்ட ஈடாக ஒரு கோடியே பத்து லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும்” என உயர்நீதிமன்றத்தில் அதிமுக சேலம் மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம் மனு தாக்கல் செய்துள்ளார்.
The post நடிகைகளையும், தன்னையும் தொடர்புபடுத்தி பேசியதால் ஏ.வி ராஜு மானநஷ்ட ஈடு வழங்க வேண்டும்: வெங்கடாசலம் வழக்கு appeared first on Dinakaran.