×
Saravana Stores

ஞானவாபி மசூதி தொடர்பான மனு இந்துக்கள் தொடர்ந்து பூஜை செய்ய அனுமதி: அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு

லக்னோ: ஞானவாபி மசூதி வளாக தெற்கு பகுதியில் அமைந்துள்ள நிலவறையில் இடம்பெற்றிருக்கும் இந்து கடவுள்களுக்கு பூஜை நடத்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதியை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி தொடர்பான மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக அறிவியல்பூா்வ ஆய்வு மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு கடந்த ஜூலையில் உத்தரவிட்டது. தொல்லியியல் துறையின் ஆய்வறிக்கையின்படி, ‘மசூதி அமைந்துள்ள இடத்தில் முன்பு இந்து கோயில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது’ என்று இந்துக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, ‘மசூதி நிர்வாகத்தால் அங்குள்ள நிலவறை கடந்த 1993ம் ஆண்டு மூடப்படும் வரை, பூஜைகளை செய்துவந்த பூசாரி சோம்நாத் வியாஸின் குடும்பத்தினருக்கு மீண்டும் பூஜைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்’ என வலியுறுத்தி சோம்நாத் வியாஸின் பேரனான சைலேந்திர குமாா் பதக் என்பவர் தரப்பில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது கோரிக்கையை ஏற்ற மாவட்ட நீதிபதி, நிலவறையில் பூஜை நடத்த அனுமதி அளித்தார். தொடர்ந்து, மசூதியில் அமைந்துள்ள நிலவறை கதவுகள் திறக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டு வருகின்றது.

இந்துக்கள் நடத்தும் பூஜைக்கு எதிர்ப்பு தெரிவித்து மசூதி நிர்வாகம் சார்பில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால் இன்று காலை தீர்ப்பு வழங்கினார். அதில், வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து, இந்துக்கள் தொடர்ந்து பூஜை செய்யலாம் எனக் கூறி மசூதி நிர்வாகத்தின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார்.

The post ஞானவாபி மசூதி தொடர்பான மனு இந்துக்கள் தொடர்ந்து பூஜை செய்ய அனுமதி: அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Gnanawabi Masjid ,Hindus ,Allahabad High Court ,High Court ,Varanasi District Court ,Gnanavabi Masjid ,Kashi Vishwanath Temple ,Varanasi, Uttar Pradesh State ,Gnanavabi Mosque ,
× RELATED தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை...