×

தலைமைச் செயலாளர், டிஜிபி, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கடிதம்!

சென்னை: தலைமைச் செயலாளர், டிஜிபி, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தை மாநில வாரியாக இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது. அதன் அடிப்படையில் தமிழகத்திலும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் கடந்த இரு தினங்களுக்கு முன் நடைபெற்றது. கூட்டத்தில் தேர்தலை அமைதியாக நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் கருத்துக்களை கேட்டார்.

மேலும் தேர்தல் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை தலைமை தேர்தல் கமிஷனரிடம் அரசியல் கட்சியினர் முன்வைத்தனர். இந்நிலையில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: திருக்கோவிலூர் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளது தொடர்பான தகவல்கள் சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து இதுவரை கிடைக்கப் பெறவில்லை. அப்படி கோப்புகள் கிடைக்கும் பட்சத்தில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உடனே அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு தலைமை தேர்தல் ஆணையம் தான் இடைத்தேர்தல் நடத்துவது பற்றி முடிவெடுக்கும்.

மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட துணை ராணுவம் தமிழ்நாடு வருகிறது. 200 கம்பெனி துணை ராணுவத்தினர் மார்ச் முதல் வாரத்தில் தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளனர். கடந்த தேர்தலில் 160 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் புதன்கிழமையில் தேர்தல் நடத்துமாறும், வார இறுதி நாட்களிலோ, வார தொடக்க நாளிலோ வாக்குப்பதிவை நடத்த வேண்டாமெனவும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் ஜூன் வரையிலான அரசு விடுமுறை நாட்கள், உள்ளூர் விழாக்கள், மதம் சார்ந்த பண்டிகைகள் குறித்த விவரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

பண்டிகைகள், விடுமுறை நாட்கள் இல்லாத நாளை தேர்வு செய்து தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள் உடன் ஆலோசனை முடிந்த பிறகே தேர்தல் தேதி குறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்படும். தொடர்ந்து பேசிய அவர், மக்களவை தேர்தலை ஒட்டி தொகுதிகளுக்குள் ஏற்கனவே பணியாற்றிய அதிகாரிகளை இடமாற்றம் செய்ய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை தொடர்ந்து தலைமைச் செயலாளர், டிஜிபி, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

 

The post தலைமைச் செயலாளர், டிஜிபி, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கடிதம்! appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,TGB ,Chief Election Officer ,Sathya Prada Chaku ,Chennai ,Chief Electoral Officer ,Sathya Pradha Saku ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்...