×

நடுக்கடலில் மீனவர்கள் மோதல் படகை கவிழ்த்து ஒருவர் கொலை: 7 பேர் கைது: நாகையில் பதற்றம், போலீஸ் குவிப்பு

நாகை: நடுக்கடலில் விரித்திருந்த வலையை அறுத்ததை தட்டிகேட்டதால் ஏற்பட்ட தகராறில் விசைப்படகால் மோதியதில் பைபர் படகு கவிழ்ந்தது. இதில் நீரில் மூழ்கி மீனவர் பலியானார். மற்றொரு மீனவர் மாயமானார். இதுதொடர்பாக 7 மீனவர்களை போலீசார் கைது செய்தனர். நாகை அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்தவர் ஆத்மநாதன்(33). இவருக்கு சொந்தமான பைபர் படகில் ஆத்மநாதன், அதே பகுதியை சேர்ந்த சிவநேசசெல்வம்(25), இவரது சகோதரர் காலாத்திநாதன்(22) ஆகியோர் நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மாலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் இரவு 10 மணி வரை நாகை துறைமுகத்துக்கு கிழக்கே 2 கடல் மைல் தொலைவில் வலைகளை விரித்து மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக நாகை கீச்சாங்குப்பத்தை சேர்ந்த கோகிலா என்ற பெயருடைய விசைப்படகு வந்தது. சிறிது நேரத்தில் பைபர் படகில் வந்த 3 மீனவர்களும் மீன் பிடிப்பதற்காக கடலில் விரித்து வைத்திருந்த வலைகளை அறுத்தவாறு விசைப்படகு சென்றது.இதுகுறித்து விசைப்படகில் இருந்த 8 மீனவர்களிடம் பைபர் படகு மீனவர்கள் கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த விசைப்படகு மீனவர்கள் தங்கள் படகால், பைபர் படகு மீது மோதினர். இதில் பைபர் படகு கவிழ்ந்து ஆத்மநாதன், சிவநேசசெல்வம், காலாத்திநாதன் ஆகியோர் கடலில் தத்தளித்தனர். பின்னர் கவிழ்ந்த பைபர் படகை பிடித்தவாறு 3 மீனவர்களும் போராடினர். ஆனாலும் 3 மீனவர்களையும் ஆயுதங்களால் விசைப்படகு மீனவர்கள் தாக்கினர். இதில் ஆத்மநாதனுக்கு முகம், கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து விசைப்படகு மீனவர்கள் தப்பி சென்றனர்.

சிறிது நேரத்தில் அந்த வழியாக வந்த நாகை நம்பியார் நகரை சேர்ந்த மீனவர்கள், தண்ணீரில் தத்தளித்த மீனவர்களை பார்த்து அருகில் விரைந்து வந்து இருவரையும் மீட்டு தங்களது படகில் அழைத்து வந்து நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை சிவநேசசெல்வம் இறந்தார். ஆத்மநாதனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடலில் விழுந்து மாயமான காலாத்திநாதனை சக மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படை போலீசார் படகில் சென்று இன்று காலை முதல் தேடி வருகின்றனர். இதுகுறித்து நாகை கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் விசைபடகு மீனவர்களை தேடிவந்தனர். இந்நிலையில் வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறை கடற்கரையில் விசைப்படகு சென்று கொண்டிருப்பதாக காலை தகவல் வந்தது. அதன்பேரில் வேதாரண்யம் போலீசார், பைபர் படகில் சென்று விசைப்படகை நிறுத்தி மீனவர்களான தர், காளியப்பன், பாலகிருஷ்ணன், வேலாயுதம், மாரியப்பன், கண்ணன், தண்டபாணி ஆகிய 7 பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பியோடிய விசைப்படகு உரிமையாளரான பாலகுமாரை தேடி வருகின்றனர்.இந்த சம்பவத்தால் அங்கு பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

The post நடுக்கடலில் மீனவர்கள் மோதல் படகை கவிழ்த்து ஒருவர் கொலை: 7 பேர் கைது: நாகையில் பதற்றம், போலீஸ் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Nagai ,Nagai Akkaraipet ,Dinakaran ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...