×

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க ஆந்திர அரசு தீவிரம்.. உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தடையானை பெற வேண்டும்: வைகோ வலியுறுத்தல்!!

சென்னை: பாலாற்றில் தடுப்பணை கட்ட ஆந்திர அரசு தீவிரம் காட்டிவரும் நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தடையானை பெற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கர்நாடக மாநிலத்தில் சிக்பெல்லாபூர் மாவட்டம், நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் பாலாறு, கர்நாடகத்தில் 93 கிலோ மீட்டரும், ஆந்திர மாநிலத்தில் 33 கிலோ மீட்டரும் பாய்ந்து தமிழ்நாட்டில் வாணியம்பாடி அருகே புல்லூர் என்ற இடத்தில் நுழைகிறது.

தமிழகத்தில்தான் அதிக அளவாக 222 கி.மீ. தூரம் பயணித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வயலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறி ஏற்கெனவே கர்நாடகத்தில் பாலாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகளும், ஆந்திர மாநிலத்தில் சிறியதும், பெரியதுமாக 21 தடுப்பணைகளும் கட்டப்பட்டதால் தமிழகத்தில் பாலாறு வறண்டு கிடக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், ஆந்திர மாநில அரசு. குப்பம் தொகுதிக்கு உட்பட்ட ரெட்டிகுப்பம் என்ற பகுதியில் பாலாற்றின் குறுக்கே கூடுதலாக புதிய தடுப்பணை ஒன்றைக் கட்ட ஏற்பாடுகள் செய்து வருகிறது. இது தொடர்பாக அம்மாநில வனத்துறை அமைச்சர், நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில், ரெட்டிகுப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை ஒன்று கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டு தடுப்பணைக்கான பணிகளை தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆந்திர அரசின் இந்த நடவடிக்கை 1892 ஆம் ஆண்டு மைசூர் மாகாணத்திற்கும், சென்னை மாகாணத்திற்கும் நதிநீர் பங்கீடு ஒப்பந்தங்களுக்கு எதிரானது. அது மட்டுமின்றி, குப்பம் பாலாறு படுகை முழுவதும் யானை வழித்தடம் ஆகும். இந்த பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்பதால் எந்தப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது; யானைகள் வழித்தடத்தில் கணேசபுரம் எனும் இடத்தில் அணை கட்டக் கூடாது என உச்சநீதிமன்றம் தடையானை வழங்கியுள்ளது.

எனவே கணேசபுரத்திலிருந்து புல்லூர் வரை யானைகள் வழித்தடம் என்பதால் அந்தப் பகுதிகளில் புதிய திட்டம் எதையும் செயல்படுத்தக் கூடாது. மீறினால் உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிரானதாக கருதப்படும். இதற்கான பணிகளை ஆய்வு செய்த ஆந்திர சுற்றுச்சூழல் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் பெத்தி ரெட்டி, பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டக்கூடாது என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் பிரச்சனை தீர்ந்து விட்டதாகவும், தேர்தலுக்குப்பின் மேலும் 2 தடுப்பணைகள் பாலாற்றில் கட்டப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் இருக்கும் போது ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டுவது உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானதாகும். பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டின் வட மாவட்டங்களின் நீர் ஆதாரம் கடுமையாக பாதிக்கப்படும். இதனால் குடிநீரின்றி மக்கள் அவதிப்படுவதுடன், வேளாண் தொழிலும் முற்றாக சீரழிந்து விடும். எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே கொடுத்துள்ள வழக்கை துரிதப்படுத்தி, பாலாற்றின் குறுக்கே அணைக்கட்ட முனையும் ஆந்திர மாநில அரசின் திட்டத்தை கைவிட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு தெரிவித்தார்.

The post பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க ஆந்திர அரசு தீவிரம்.. உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தடையானை பெற வேண்டும்: வைகோ வலியுறுத்தல்!! appeared first on Dinakaran.

Tags : Andhra Govt ,Tamilnadu Govt ,Supreme Court ,Vaigo ,Chennai ,Madhyamik General Secretary ,Vaiko ,Tamil Nadu government ,Andhra government ,Bala ,Chikbellapur district ,Karnataka ,Tamilnadu government ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு