*பொதுமக்கள், வியாபாரிகள் அரசுக்கு நன்றி
கம்பம் : கம்பம் நகரில் ரூ.7.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள புதிய வாரச் சந்தைக்கு பொதுமக்கள், வியாபாரிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். வியாபாரிகள், லோடுமேன்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் அத்தியாவசிய வசதிகள் அமைந்துள்ளதால் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கம்பம் நகரில் ரூ.7.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய வார சந்தையை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். கம்பம் நகரின் வளர்ச்சிக்கு புதிய வாரச்சந்தை உறுதுணையாக நிற்கும் என சமூக ஆர்வலர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகராக கம்பம் உள்ளது. கம்பத்தில் உள்ள மொத்தம் 20 ஆயிரம் குடியிருப்புகளில் சுமார் 85 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். மொத்தம் உள்ள 33 வார்டுகளின் அடிப்படை தேவைகளை கம்பம் நகராட்சி பூர்த்தி செய்து வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை காணொலி வாயிலாக புதிய வாரச் சந்தையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். கம்பம் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் வனிதா நெப்போலியன், கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் வாசுதேவன், பொறியாளர் அய்யனார் ஆகியோர் கலந்து கொண்டு வாரச்சந்தையை பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட புதிய வாரச்சந்தை கட்டும் திட்டம், திமுக அரசு பொறுப்பேற்றதும் கம்பம் நகராட்சி தலைவர் வனிதா நெப்போலியன் மேற்பார்வையில் புதிய வாரச் சந்தைப் பணிகளில் தனி அக்கறை காட்டப்பட்டது. அந்த வகையில் விரைவாக வாரச்சந்தை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சுமார் 25 வருடங்களுக்கு முன் கம்பம் அரசமரம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இயங்கி வந்த காய்கறி கடைகளை அப்புறப்படுத்தி உழவர் சந்தையை அன்றைய கலைஞர் அரசு உருவாக்கி தந்தது. அதன் பின் கம்பத்திற்க்கு வரும் பொதுமக்கள், வியாபாரிகளின் வருகை அதிகரித்தது.
இந்த உழவர் சந்தைக்கு கம்பத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் மட்டுமின்றி கேரளாவை சேர்ந்தவர்கள் வர தொடங்கினர். இதனால் தமிழக அளவில் கம்பம் உழவர் சந்தை, ஒட்டன்சத்திரம் உழவர் சந்தைக்கு அடுத்தபடியாக பிரபலமடைந்தது. நாளொன்றுக்கு 35 டன் முதல் 40 டன் காய்கறிகளை விற்று தீர்த்தது. உழவர் சந்தை வரும் பெரும்பாலான வெளியூர் வாசிகள் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் கம்பம் வாரச்சந்தைக்கு தவறாமல் வரத் துவங்கினர்.
கம்பம், புதுப்பட்டி, கே.கே.பட்டி, என்.டி.பட்டி, சுருளிப்பட்டி, ராயப்பன்பட்டி, கூடலூர், பாளையம், தேவாரம் மற்றும் அனுமந்தன்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து பொதுமக்கள் மட்டுமின்றி வியாபாரிகளும் வந்து தங்கள் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் கம்பம் வாரச்சந்தை சேறும், சகதியுமாக காட்சியளித்தது.
இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு , கலைஞர் நகர்புற திட்டம் சார்பில் கடந்த வருடம் மே மாதம் 26ம் தேதி 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட கம்பம் வாரச் சந்தை வளாகத்தில் புதியதாக 262 கடைகள்,23 வணிக வளாக கடைகள், வாகனங்கள் நிறுத்துமிடம், வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளிகள் ஓய்வெடுக்கும் அறை மற்றும் கழிப்பறை ஆகியவை கட்டும் பணிகள் துவங்கின. அடுத்த 9 மாதங்களுக்குள் பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டு வாரச்சந்தை அனைத்து வசதிகளுடன் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
புதிதாக கட்டப்பட்டுள்ள வாரச்சந்தைக்கு வரும் பொதுமக்கள் தங்களின் வாகனத்தை பாதுகாப்பாக நிறுத்தி செல்ல டூ வீலர் பார்க்கிங், வாரச்சந்தைக்கு வரும் மூடைகளை இறக்கி வைக்க வரும் லோடுமேன்கள் மற்றும் வியாபாரிகள் ஓய்வெடுக்க ஓய்வறை உள்ளது. இத்துடன் பொதுமக்கள் கழிப்பறை உட்பட அனைத்து வசதிகளும் கம்பம் வாரச்சந்தையில் உள்ளன. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில்,“கம்பம் நகரில் தொழில் வளர்ச்சி பெருகும். தேனி மாவட்டத்தில் மிகப்பெரிய நகராக கம்பம் உள்ளது. வளர்ந்து வரும் கம்பம் நகராட்சிக்கு புதிய வாரச்சந்தை கட்டப்பட்டு இருப்பது நகரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். புதிய வாரச்சந்தையால் நகரில் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.வெளியூர் வாசிகள் அதிகளவில் கம்பத்திற்கு வந்து செல்வார்கள் . இதனால் கம்பத்தில் உள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்’’ என்றனர்.
இதுகுறித்து நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் கூறுகையில், கம்பத்தில் வாரச்சந்தை கட்டுமான பணிகளுக்கு என ரூ.7.75 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கும், உள்ளாட்சித் துறை அமைச்சருக்கும் கம்பம் நகராட்சி சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம். நகரின் வளர்ச்சிக்கு பல்வேறு ஆக்க பணிகளை தமிழக அரசு செய்து வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் மக்கள் நலனுக்கு உகந்த எண்ணற்ற பல திட்டங்களை தமிழக அரசு உருவாக்கி கொடுத்துள்ளது. தமிழக முதல்வரின் ஆணைப்படி கம்பம் நகராட்சி இயங்கி வருகிறது’’ என்றார்.
The post கம்பத்தில் புதிய வாரச்சந்தை திறப்பு பொருளாதார வளர்ச்சி அதிகாிக்க வாய்ப்பு appeared first on Dinakaran.