×

நெல்லை மாவட்டத்தில் 39 மழைமானி அமைக்கும் பணிகள் தொடக்கம்

*மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

நெல்லை : நெல்லை, தூத்துக்குடியில் கடந்த ஆண்டு டிசம்பர் 17, 18ம் தேதிகளில் பெருமழை பெய்தது. அப்போது ஏற்பட்ட வெள்ளத்தில் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டது. பலர் உடமைகளை இழந்து வாடினர். வீடுகளை இழந்தவர்களுக்கும், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் அரசு நிவாரண உதவிகளைச் செய்தது.

இந்த எதிர்பாராத மழை வெள்ளத்தை முன்கூட்டியே கணிக்க நெல்லை மாவட்டத்தில் போதிய மழைமானிகள் இல்லை. இதனால் எந்த இடத்தில் எவ்வளவு மழை பெய்தது. எப்போது வெள்ளம் வரக்கூடும் என்ற தகவல்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியாமல் இருந்தன. இதன் காரணமாக நெல்லை, கொக்கிரக்குளத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் உட்பட பல அரசு அலுவலகங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த பிரச்னைக்கு தீர்வாக தமிழக அளவில் ஏற்கனவே மழைமானி அமைக்கும் திட்டம் செயலில் இருந்த நிலையில், வெள்ளத்திற்குப்பிறகு அந்தப் பணிகள் வேகமெடுத்தது.

அதன்படி, நெல்லை தாலுகாவில் 3 மழைமானி நிலையங்களும், பாளையங்கோட்டை தாலுகாவில் 4 மழைமானி நிலையங்களும் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. அதுபோல் அம்பாசமுத்திரம் தாலுகாவில் 3ம், சேரன்மகாதேவி தாலுகாவில் 2ம், மானூர் தாலுகாவில் 5ம், நாங்குநேரி தாலுகாவில் 8ம், ராதாபுரம் தாலுகாவில் 7ம், திசையன்விளை தாலுகாவில் 7ம் என மொத்தம் 39 தானியங்கி மழைமானி நிலையங்கள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.

இதற்காக தகுதியான இடங்கள் தேர்வு செய்து நிறுவுவது, செயல்படுத்துவது போன்ற பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தானியங்கி மழைமானி அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நேற்று முன்தினம் துவங்கியது. இதனை மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வம் உடனிருந்தார். இதுகுறித்து மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் கூறுகையில், ‘மாவட்டம் முழுவதும் விரைவில் தானியங்கி மழைமானி அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்’ என்றனர்.

மலைப்பகுதியில் மழைமானி தேவை

மலைப்பகுதிகள் அதிகமாக உள்ள அம்பை தாலுகாவில் 3 மழைமானி நிலையங்கள் மட்டுமே அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அந்த பகுதியில் தான் மழைப்பொழிவு அதிகம் உள்ள மாஞ்சோலை, ஊத்து உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. அந்த இடங்களில் அதிகமான மழைமானி நிலையங்கள் அமைத்தால் வெள்ளம் ஏற்படுவதை முன்கூட்டியே கணிக்கலாம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் அந்தப்பகுதிகளில் கூடுதலாக மழைமானி அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post நெல்லை மாவட்டத்தில் 39 மழைமானி அமைக்கும் பணிகள் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Nellai district ,Revenue Officer ,Nellai ,Nellai, Tuticorin ,Dinakaran ,
× RELATED ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை...