×

பிரதமர் மோடி 28ம் தேதி வருகையையொட்டி நெல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை

நெல்லை : நெல்லைக்கு வரும் 28ம் தேதி பிரதமர் மோடி தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இதையொட்டி பிரசார மேடை அமைக்கும் பணி, ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கும் பணி நடைபெற்று வரும் பாளை பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.பிரதமர் நரேந்திரமோடி வரும் 27, 28 ஆகிய இருநாட்கள் தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்க வருகிறார். 28ம் தேதி மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வருகிறார். அங்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் பணிகளை துவக்கி வைக்கிறார்.

இதைத்தொடர்ந்து வரும் 28ம் தேதி காலை சுமார் 10.45 மணிக்கு அவர் பாளை பெல் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்காக அவர் தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பாளை ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் வந்து இறங்குவதற்காக ஹெலிபேடு அமைக்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. ஜான்ஸ் பள்ளி மைதானத்திலிருந்து குண்டு துளைக்காத காரில் பெல் பள்ளி மைதானத்திற்கு பிரதமர் மோடி வருகிறார்.

இதையொட்டி பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியில் மேடை, தொண்டர்கள், முக்கிய பிரமுகர்கள் அமர்ந்திருப்பதற்கான பகுதிகளில் பந்தல் அமைக்கும் பணியும் விரைவு படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாளை ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் இருந்து பெல் பள்ளி மைதானம் வரை பிரதமர் செல்லும் சாலையில் உள்ள வேகதடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

பாளை சமாதானபுரம் ரவுண்டான முதல் பாளை கேடிசி நகர் நான்குவழிச்சாலை வரை பல்வேறு பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை மாநகருக்குள் வரும் வாகனங்களை நிறுத்தி விசாரணை நடத்தி, சோதனையிடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் பெல் பள்ளி அருகே திருச்செந்தூர் சாலையில் தடுப்புகள் அமைத்து போலீசார் அப்பகுதி வழியாக வரும் கார் உள்ளிட்ட வாகனங்களை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதுபோல் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட போலீஸ் வாகனம் பெல் பள்ளி மைதானம், ஹெலிபேட் பகுதியிலும் நிறுத்தி வைக்கப்பட்டு 24 மணி நேரம் கண்காணிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுக்கூட்டம் நடக்கும் பகுதியிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் சுற்றிலும் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், ஓட்டல்களில் தங்கியுள்ளவர்கள் பெயர், முகவரிகள் ஆகியவற்றை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

நெல்லைக்கு பிரதமர் மோடி வருகையை யொட்டி 5ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இருந்து ஆயிரம் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார், பட்டாலியன் போலீசார் ஆயிரம் பேர் என மொத்தம் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இவர்களுடன் மத்திய, மாநில மற்றும் உள்ளூர் உளவு துறை போலீசாரும் களத்தில் இறக்கிவிடப்படவுள்ளனர். மேலும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களிலிருந்து 2 ஆயிரம் ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

The post பிரதமர் மோடி 28ம் தேதி வருகையையொட்டி நெல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை appeared first on Dinakaran.

Tags : Modi ,Nellai ,Palai ,
× RELATED முறையான பராமரிப்பு இன்றி...