×

நீலகிரியில் அங்கக வேளாண்மை திட்டங்களுக்காக ரூ.10 கோடி அறிக்கை தயார்

*சுற்றுலாதுறை அமைச்சர் பேச்சு

மஞ்சூர் : நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மை திட்டங்களுக்காக ரூ.10 கோடிக்கான அறிக்கை தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளதாக சுற்றுலாதுறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள கிண்ணக்கொரை கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் அங்கக முறையில் தேயிலை சாகுபடி திட்டத்தின் கீழ் இயற்கை விவசாய உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு மானியத்துடன் விவசாய கருவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷிணி, தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் ஷிபிலா மேரி, ஊட்டி கோட்டாட்சியர் மகராஜ், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அனிதா, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், குந்தா தாசில்தார் கலைச்செல்வி, மேல்குந்தா ஊராட்சி தலைவர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சையது முகமது வரவேற்றார்.

இதைத்தொடர்ந்து கிண்ணக்கொரையை சேர்ந்த இயற்கை விவசாய உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு ரூ.1 கோடியே 38 லட்சம் மானியத்தில் பல்வேறு விவசாய கருவிகளை அமைச்சர் வழங்கினார். இதைத்தொடர்ந்து அமைச்சர் பேசியதாவது: நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மையை பெருமளவு ஊக்குவித்து காற்று, நீர் மற்றும் மண் மாசுபடாமல் நஞ்சில்லா உணவு பொருட்களை உற்பத்தி செய்யும் நோக்கில் கடந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் செயல்படுத்தும் நோக்கில் இந்த ஆண்டு ரூ.2.16 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் காய்கறி பயிர்களில் அங்கக வேளாண்மை 250 ஹெக்டர் பரப்பிலும், சிறுதானிய பயிர்களில் அங்கக வேளாண்மை 100 ஹெக்டர் பரப்பிலும், வாசனை திரவிய பயிர்கள் 125 ஹெக்டர் பரப்பிலும் மற்றும் தேயிலை தோட்டத்தில் பழப்பயிர்கள் சாகுபடிக்கு 200 ஹெக்டர் பரப்பிலும் மேற்கொள்ளப்படவுள்ளது.

இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு பசுந்தாள் உரவிதைகள், டாலமைட் வெர்மி, கம்போஸ்ட், வேப்பம் புண்ணாக்கு, உயிர் உரங்கள், பூச்சி நோய் கட்டுப்படுத்த உயிரியல் கட்டுப்பாடு காரணிகள், பஞ்சகாவ்யா, தசகாவியா போன்றவை வழங்கப்படுகின்றன. இது மட்டுமில்லாமல் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் 5 பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு தேவையான இடு பொருட்கள், செயல் விளக்கங்கள், தேவையான தொழில்நுட்ப உதவிகள் வழங்கும் வகையில் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள தோட்டக்கலை வளாகம் அங்கக வேளாண்மை சேவை மையமாக செயல்படுத்தபடவுள்ளது. விவசாயிகளுக்கு நஞ்சில்லாத விளைப்பொருட்களை சந்தைப்படுத்த வார சந்தை கடந்த வாரம் துவக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மை திட்டங்களுக்காக இந்த ஆண்டு ரூ.10 கோடிக்கான அறிக்கை தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டகளை எல்லாம் விவசாயிகள் முழுமையாக பயன்படுத்த வேண்டும். கிண்ணக்கொரை கிராமத்தின் சுற்றுப்புற சூழலை பாதுகாத்து தேயிலை விவசாயத்தை அங்கக முறையில் உற்பத்தி செய்து முன் உதாரணமாக கொண்டு வரும் நோக்கில் சிறப்பு பகுதி மேம்பாடுத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு ரூ.71.68 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான டாலமைட்ராக்பாஸ்பேட், கம்போஸ்ட் உரம், உயர் உரங்கள் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

மேலும் தேயிலை தோட்டத்தினை பராமரிக்க தேவையான 50 அறுவடை இயந்திரங்கள், 8 தேயிலை கவாத்து இயந்திரங்கள், 12சால் வெட்டும் கருவிகள், 16 களை வெட்டும் கருவிகள், 4 தேயிலை செடியினை தூளாக்கும் கருவிகள் கிண்ணக்கொரையில் தோட்டக்கலைத்துறையின் மூலம் உருவாக்கப்பட்ட இயற்கை விவசாய உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு வழங்கப்பட்டு இதன் மூலம் இப்பகுதியில் உள்ள தோட்டங்கள் முறையாக பராமரிக்கப்படும்.

மேலும் மாட்டு சானத்தை கரைத்து ஊட்டமேற்றி அதனை அனைத்து தோட்டங்களுக்கும் கொண்டு சென்று தெளிக்க தேவையான பயோ டிஜிஸ்டர், எப்ஆர்பி டேங்க், டிரைலர் மற்றும் டிராக்டர் வழங்குவதன் மூலம் தேயிலை தோட்டங்களில் தரமான கொழுந்துகள் எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் இத்திட்டத்தினை முழுமையாக பயன்படுத்தி இயற்கை முறையில் நல்ல மகசூல் பெற்று பயன் பெற வேண்டும் என அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார். நிகழ்ச்சியில் கிண்ணக்கொரை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post நீலகிரியில் அங்கக வேளாண்மை திட்டங்களுக்காக ரூ.10 கோடி அறிக்கை தயார் appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Tourism Minister ,Manjoor ,Ramachandran ,Nilgiri district ,Kinnakorai ,Dinakaran ,
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...