×

பதநீர் சீசனால் கருப்பட்டி தயாரிப்பு பணி துவக்கம்

ராமநாதபுரம் : பதநீர் சீசன் துவங்கியுள்ளதால் தொழிலாளர்கள் பனையை சீவுதல், மண் கலையம் வைத்தல், பதநீர் காய்ச்சி, கருப்பட்டி தயாரிப்பு பணிகளை துவங்கியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கன்னிராஜபுரம், நரிப்பையூர், காவாகுளம், கடுகுசந்தை முதல் சிக்கல் வரையிலான சாயல்குடி பகுதிகள், திருப்புல்லாணி, ராமநாதபுரம், ரெகுநாதபுரம்,தாமரைக்குளம், வண்ணாங்குண்டு,நொச்சியூரணி, மண்டபம் பகுதிகள், ராமேஸ்வரம் தீவு பகுதிகள், திருவாடானை உள்ளிட்ட மாவட்டத்தின் பரவலான பகுதிகளில் சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான பனை மரங்கள் உள்ளன.

சுமார் 2 லட்சம் குடும்பங்கள் பனை மரம் மற்றும் பனைமர உப தொழில் செய்து வருகின்றனர். பனை ஓலை முதல் மரத்தின் வேர் பகுதி வரை பயனுள்ளதாக இருப்பது பனை மரத்தின் தனிச்சிறப்பு. இதனால் பூலோகத்தின் கற்பகதரு என அழைக்கப்படுகிறது. கடந்த காலங்களில் பருவ மழை பெய்து, நெல் அறுவடை செய்யும் நேரங்களில் கருப்பட்டி உற்பத்திக்காக பனை மரத்தின் பதநீருக்காக பாளை வெட்டப்படுவது வழக்கம். இதற்காக இப்பகுதியில் பனைமர திருவிழா நடந்து வந்தது.

ஆனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தொடர் வறட்சி காரணமாக பல இடங்களில் பனை மரங்கள் பட்டுபோனது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை நன்றாக பெய்தது. இதனால் இந்தாண்டு பதநீர் உற்பத்தி அதிகரித்து, கருப்பட்டி உற்பத்தி அமோக நடக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் தற்போது தொழிலாளர்கள் பதநீர் இறக்கி, கருப்பட்டி காய்ச்சுவதற்காக பனைமரம் சீவுதல், பாளை சீவுதல், பனை மட்டையில் மண்கலையம்(மண் முட்டி) கட்டுதல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.

தற்போது தான் சீசன் துவங்கியுள்ளதால் பாளை உற்பத்தி அதிகரித்து, பதநீர் தன்மை மாற்றமடைந்து வழுவழுப்பு தன்மையுடன் இருக்கிறது. நாள் ஒன்றிற்கு 15 மரங்களில் 20 லிட்டர் பதநீர் மட்டுமே கிடைக்கிறது. இதனால் அந்த பதநீர் கருப்பட்டி காய்ச்சுவதற்கு உகந்ததாக இல்லை. அடுத்த மாதம் முதல் சுவைமிக்க தரமான பதநீர் கிடைக்கும் என தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து கடுகுசந்தை, சத்திரம், பெரியகுளம் பகுதி பனை மர தொழிலாளிகள் கூறும்போது, ‘‘ஆண்டு தோறும் தை மாதம் துவக்கத்தில் பனையில் பாளையை சீவ துவங்குவோம். ஆனால் கடந்த காலங்களில் ஏற்பட்ட தொடர் வறட்சியால் மாசி, பங்குனி, சித்திரை என காலம் கடந்து சீசன் துவங்கியது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக நல்ல மழை பெய்ததால், பட்டுபோன மரங்கள் செழிப்பாக வளர்ந்து வருகிறது. இதனால் இந்தாண்டு பதநீர் அதிகரித்து கருப்பட்டி உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

தற்போது பனை மரத்தின் தேவையற்ற ஓலைகளை அகற்றுதல், பாளை சீவுதல், பதநீருக்காக மண் கலையம் கட்டுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். நாள் ஒன்றிற்கு காலை மற்றும் மாலையில் 20 பனை மரங்கள் ஏறி பணிகளை செய்கிறோம்.இந்தாண்டிற்கு முதன் முறையாக பனை பாளை சீவப்படுவதால், காலநிலை மாற்றத்தால் பதநீர் தன்மை மாறி, வளுவளுப்பு தன்மையுடன் இருக்கிறது. இதனால் 15 மரங்களில் சுமார் 20 லிட்டர் பதநீர் கிடைக்கிறது. இதனை கொண்டு வெறும் 2 கிலோ கருப்பட்டி மட்டுமே உற்பத்தி செய்யும் நிலை உள்ளது.

இரண்டாம் கட்ட பதநீர் உற்பத்தியின் போது சுவை மாறி, தரமான பதநீர் கிடைக்கும், அப்போது உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பதநீர் உற்பத்திக்கேற்ப கருப்பட்டி உற்பத்தி செய்யப்படும் நிலை இருப்பதால், அதனை பொறுத்து இந்தாண்டு கருப்பட்டியின் விலை நிர்ணயம் செய்யப்படும் என்றனர்.

The post பதநீர் சீசனால் கருப்பட்டி தயாரிப்பு பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Ramanathapuram district ,Kannirajapuram ,Naripaiyur ,Kavakulam ,Sayalkudi ,Kadugushanthi ,Sikal ,Thirupullani ,
× RELATED சுட்டெரிக்கும் கோடை வெயிலால் ஐஸ் பார்கள் விற்பனை படுஜோர்