×

வாணியம்பாடி அருகே மாராப்பட்டில் பாலாற்றில் செத்து மிதக்கும் மீன்கள்

*கழிவுநீர் கலப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

ஆம்பூர் : வாணியம்பாடி அருகே மாராப்பட்டு பாலாற்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் நேற்று செத்து மிதந்தன. கழிவுநீர் கலப்பதாக குற்றச்சாட்டு வைத்துள்ள விவசாயிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆந்திராவில் உற்பத்தியாகும் பாலாறு தமிழகத்தில் வாணியம்பாடி அருகே நுழைந்து வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர் என தன் பயணத்தை தொடர்கிறது. இதில் குறிப்பாக வாணியம்பாடியில் பல கிளைகளாக பிரியும் பாலாறு மாரப்பட்டு அருகே ஒன்று சேர்கிறது. இந்த இடத்தில் அதிக அளவு பாலாற்று நீர் பாய்ந்தோடி வரும் வகையில் உள்ளது. இந்த பாலாற்று நீர் மற்றும் அருகில் உள்ள நிலத்தடி நீரை நம்பி சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான தென்னை மற்றும் இதர விவசாய பயிர்கள் பயிரிடபட்டு வருகின்றன.

இதில் மாராப்பட்டு, வடசேரி, வடகரை, மின்னூர், மேல் சாணாங்குப்பம் ஆகிய பகுதிகளில் அடிக்கடி தோல் கழிவுநீர் பாலாற்றில் கலந்து வருவதாக அப்பகுதியினர் மற்றும் விவசாயிகள் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். கழிவுநீரால் பலமுறை பாலாற்றில் மாராப்பட்டு பாலம் அருகே பொங்கும் நுரையுடன் கூடிய கழிவுநீர் கலப்பதால் பாலாறு முழுவதும் துர்நாற்றம் வீசி, நுரை காற்றில் பறக்கும் நிலை இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியினர் பாலாற்றை கடந்து செல்லும் போது, அங்கு அதிக அளவில் நீர் கடந்து செல்வதை கண்டனர். அப்போது உற்று நோக்கிய போது அந்த நீரில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதை கண்டனர். இதுகுறித்து அப்பகுதியினர் வேதனையுடன் தெரிவிக்கையில், ‘இயற்கை சூழலில் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் நீர் மிக முக்கியமானது. ஆனால் பாலாற்றில் கழிவுநீர் கலப்பதால் நீர் மாசுபாடுவது தொடர்ந்து இருந்து வருகிறது.

இதனால் இந்த பாலாற்றை நம்பி உள்ள பல்வேறு கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிக்கபட்டு விவசாயத்திற்கு உதவாத நிலையில், தண்ணீர் உப்பு தன்மையாக மாறியுள்ளது. தொடர்ந்து இத்தகைய விதிமீறல் நடவடிக்கை மேற்கொண்டு வருவோர் மீது மாசகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும்’ என தெரிவித்தனர். இதனால் மாராபட்டு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆய்வுக்காக நீர் மாதிரி சேகரிப்பு

மாராப்பட்டு பாலாற்றில் மீன்கள் செத்து மிதப்பதாக மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சுற்றுச்சூழல் அலுவலர் கோபாலகிருஷ்ணன் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். அங்கு ஆற்றில் இருந்த நீரின் மாதிரிகளை ஆய்வுக்காக சேகரித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மீன்கள் செத்து மிதந்த இடத்தில் இருந்த நீரின் மாதிரிகள் சேகரிக்கபட்டு அவற்றின் தரம் குறித்து ஆய்வு செய்ய ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த மாதிரியின் முடிவுகள் பெறப்பட்டு உரிய நடவடிக்கைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளபடும்’ என்றார்.

The post வாணியம்பாடி அருகே மாராப்பட்டில் பாலாற்றில் செத்து மிதக்கும் மீன்கள் appeared first on Dinakaran.

Tags : Maraphat ,Vaniyampadi ,Marapat ,Andhra ,Tamil Nadu ,
× RELATED சிக்னல் கோளாறால் சென்னை ரயில் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் அவதி