×

திம்பம் மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 15 பேருக்கு காயம்

சத்தியமங்கலம் : திம்பம் மலைப்பாதையில் வேன் கவிழ்ந்த விபத்தில் சுற்றுலா வந்த 15 பேர் காயமடைந்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத் துறையில் பணிபுரியும் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பணியாளர்கள் தங்கள் குடும்பத்துடன் ஒரு வேனில் சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்றனர். ஆசனூர் மலைப்பகுதியில் சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் கரூர் செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக வேனில் நேற்று மாலை சென்று கொண்டிருந்தனர். திண்டுக்கல் மாவட்டம் கோட்டநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி (27) வேனை ஓட்டினார்.

11வது கொண்டை ஊசி வளைவில் வேன் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச் சுவர் மீது மோதி கவிழ்ந்து விபத்து உள்ளானது. இந்த விபத்தில் வேனில் இருந்த ஆசைத்தம்பி(31), தீபா(43), ஓட்டுநர் ஈஸ்வரமூர்த்தி,கோபி (47), ரேவதி(42), வைஷ்ணவ்(11), பிரகாஷ் (39), திவ்யா (32), பத்மினி (58), தாரிணி(23), நல்லதம்பி (40), தர்ஷன்(16), ஏகநாதன்(33), பரமேஸ்வரி (32), வாகினி(3) ஆகியோருக்கு எலும்பு முறிவு,சிராய்ப்பு காயம், மற்றும் மொக்கை காயம் ஏற்பட்டது. மற்றவர்களுக்கு காயம் ஏதுமில்லை.

இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காயம்பட்டவர்கள் மீட்கப்பட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post திம்பம் மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 15 பேருக்கு காயம் appeared first on Dinakaran.

Tags : Thimbam hill pass ,Sathyamangalam ,Thimbam mountain pass ,Karur ,Dindigul ,
× RELATED சத்தியமங்கலம் பண்ணாரி அருகே கடும்...