×

10ம் நூற்றாண்டை சேர்ந்த அலம்பூசன் சிற்பம் கண்டுபிடிப்பு

*சகல கலை பொருந்திய அரவானை வீழ்த்தியவருக்கு சிலை வைத்து வழிபாடு

குளத்தூர் : வேம்பாரில் 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாபாரத போர் வீரனான அலம்பூசன் சிற்பம் கண்டறியப்பட்டது.தூத்துக்குடி மாவட்டம் வேம்பாரில் அங்காளஈஸ்வரி அம்மன் கோயில் பகுதியில் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் ஆய்வாளர்கள் வேம்பார் குணசேகரன், அருப்புக்கோட்டை ஸ்ரீதர், முனைவர் தாமரைக்கண்ணன் ஆகியோர் மேற்பரப்பு கள ஆய்வு செய்தனர். அப்போது வித்தியாசமான சிற்பம் ஒன்றை கண்டறிந்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: அலம்பூசன் என்பவர் மகாபாரதப் போரில் அரவான் என்பவரை அழிக்க துரியோதனனால் அனுப்பப்பட்டவர் ஆவார். தமிழில் எழுதப்பட்ட மகாபாரதத்தில் மட்டுமே அரவான் குருசேத்திர போருக்கு முன் களப்பலியானவர் என்றுள்ளது. இதனை தவிர்த்து ஏனைய மொழி காவியங்களில் அரவான் போரில் 8 நாட்கள் பங்கேற்றான் என்றும் 8வது நாளில் அரவானால் கவுரவர்கள் பக்கம் இழப்பு அதிகம் ஏற்பட, துரியோதனன் அரக்கர் குலத்தைச் சேர்ந்த ரிஷ்யசிரிங்கரின் மகனான அலம்பூசனிடம் அரவானை கொன்றுவிடும்படி ஆணையிடுகிறார்.

அனைத்து வித்தைகளிலும் சிறந்து விளங்கிய அரவானை அழிக்க, அவனுக்கு இணையான அலம்பூசன் எதிர்த்து போரிட அலம்பூசனை பல துண்டுகளாக வெட்டி எறிந்தார் அரவான். பின்பு அவை ஒன்றிணைந்து கருட வடிவம் எடுத்து அரவான் தலையை கொய்து கொன்றதாக மகாபாரதம் பீஷ்ம பருவம் குறிப்பிடுகிறது. அத்தகைய வீரம் பொருந்திய அலம்பூசனின் சிற்பம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

அலம்பூசன் சிற்பத்தின் தலைப்பகுதி கரண்ட மகுடமும், நன்கு நீண்ட காதுகளில் அணிகலன் தெளிவின்றியும் இரண்டு கரங்களில் வலது கரத்தில் மலர் செண்டும், இடது கரத்தை கீழே தொங்கவிட்டும் மார்பானது இடதுபுறம் பருத்த மார்பும், வலதுபுறம் சிறுத்தும் சம பங்காக நின்ற கோலத்தில் செதுக்கப்பட்டுள்ளது. இடையில் இடைக்கச்சை செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்ப வடிவமைப்பை வைத்து பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்பாண்டியர் காலத்தை சேர்ந்ததாக கருதலாம்.

மேலும் பாண்டிய தேசத்தில் இதுபோன்ற காவிய மாந்தர்களின் சிற்பங்கள் தொடர்ந்து கிடைத்து வருவதை பார்க்கும்போது முற்கால பாண்டியர்கள் புராணங்களுக்கும் காவியங்களில் இடம்பெறும் நபர்களுக்கும் எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதை நாம் அறியலாம்.

இந்த சிற்பம் முற்காலபாண்டியர் காலத்தில் ஏதேனும் போர் நடந்திருக்க வேண்டும் என்றும் சகல கலையும் பொருந்திய அரவானையே வீழ்த்தியதாக கருதப்படும் அலம்பூசனுக்கு சிலை எடுத்தால் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையில் இச்சிலையை வைத்திருக்கலாம். இக்கோயிலில் அதே காலத்தைச் சேர்ந்த பைரவர் சிற்பமும் காணப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post 10ம் நூற்றாண்டை சேர்ந்த அலம்பூசன் சிற்பம் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Aravan ,Kulathur ,Mahabharata ,Vembar ,Pandyanadu Cultural Center Archeology ,Ankalaeswari Amman ,Thoothukudi district ,
× RELATED கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை...