×

இப்படியோர் நினைவிடம் வாய்க்குமென்றால் எத்தனை முறையும் இறக்கலாம்’ -கலைஞர் நினைவிடத்தை பார்வையிட்ட கவிஞர் வைரமுத்து X தளத்தில் பதிவு!

சென்னை: ‘இப்படியோர் நினைவிடம் வாய்க்குமென்றால் எத்தனை முறையும் இறக்கலாம்’ என சென்னை மெரினா கடற்கரையில் அதி நவீன தொழில்நுட்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நினைவிடத்தை பார்வையிட்ட கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர்களான அண்ணா, கலைஞர் ஆகியோரின் நினைவிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார். இதில், பங்கேற்க திமுக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தின் 5 முறை முதல்வராக இருந்த கலைஞர் கடந்த 2018ம் ஆண்டு வயது முதிர்வு மற்றும் உடல் நிலை பாதிப்பு காரணமாக காலமானார். இதன்பின்னர், அவரது உடல் பல்வேறு சட்ட போராட்டத்திற்கு பிறகு, நீதிமன்றத்தின் உத்தரவின்படி மெரினாவில் உள்ள அண்ணாவின் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதனையடுத்து, தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் நவீன தமிழ்நாட்டின் சிற்பி என அழைக்கப்படும் கலைஞருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று 2021ம் ஆண்டு சட்டமன்றத்தில் அறிவித்தார்.

அதன்படி, கடந்த இரண்டு வருடங்களாக அண்ணாவின் நினைவிடத்தை புதுப்பித்தும், கலைஞர் நினைவிடமும் கட்டப்பட்டு வந்தன. தற்போது கட்டிட பணிகள் முழுவதுமாக நிறைவடைந்துள்ளதையடுத்து இன்று மாலை 7 மணிக்கு அண்ணா,கலைஞரின் நினைவிடம் முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்படவுள்ளது.

இந்நிலையில் மெரினா கடற்கரையில் அதி நவீன தொழில்நுட்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நினைவிடத்தை கவிஞர் வைரமுத்து பார்வையிட்டார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது;

“கலைஞர் நினைவிடம் கண்டு சிலிர்த்தேன்

கலைஞரின் கையைப் பிடித்துக்கொண்டே கலைஞர் நினைவிடம் சுற்றிவந்த உணர்வு

இது தந்தைக்குத் தனயன் எழுப்பிய மண்டபமல்ல தலைவனுக்குத் தொண்டன் கட்டிய தாஜ்மஹால்

‘இப்படியோர் நினைவிடம் வாய்க்குமென்றால் எத்தனை முறையும் இறக்கலாம்’

கலைஞர் கண்டிருந்தால் கவிதை பாடியிருப்பார்

உருவமாய் ஒலியாய் புதைத்த இடத்தில் கலைஞர் உயிரோடிருக்கிறார்

உலகத் தரம் நன்றி தளபதி” என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

The post இப்படியோர் நினைவிடம் வாய்க்குமென்றால் எத்தனை முறையும் இறக்கலாம்’ -கலைஞர் நினைவிடத்தை பார்வையிட்ட கவிஞர் வைரமுத்து X தளத்தில் பதிவு! appeared first on Dinakaran.

Tags : Vairamuthu X ,Chennai ,Chennai Marina ,Anna ,Marina ,
× RELATED மெரினாவில் பாய்மர படகு விளையாட்டு தளம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு