×

காஷ்மீரில் இருந்து பஞ்சாப் வரை டிரைவர் இல்லாமல் ஓடிய சரக்கு ரயில்: மணிக்கு 100 கி.மீ வேகத்தில் சென்றதால் பரபரப்பு

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் இருந்து பஞ்சாப் வரை ஓட்டுநர் இல்லாமல் ஒரு சரக்கு ரயில் 70 கிமீ தூரம் ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் ஜம்முவில் இருந்து பஞ்சாப் மாநிலம் ஜலந்தருக்கு நேற்று காலை சரக்கு ரயில் சென்றது. 53 பெட்டிகளை கொண்ட அந்த ரயில் காலை 7.25 மணிக்கு கத்துவா ரயில் நிலையத்திற்கு வந்தது. அங்கு ஓட்டுநர்கள் மாற்றப்பட வேண்டும் என்பதால் டிரைவர் மற்றும் உதவி டிரைவர் ஆகியோர் ரயிலில் இருந்து கீழே இறங்கியுள்ளனர். அப்போது சரிவாக இருந்த அந்த பாதையில் ரயில் திடீரென நகர்ந்தது.

ரயில் வேகமாக ஓடியதால் அங்கிருந்த ரயில்வே அதிகாரிகள், பணியாளர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. ரயில் வேகமாக ஓடியதால் அந்த தடத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு ரயில் பாதையை யாரும் கடக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சாய்வான பாதை என்பதால் சில பகுதிகளை கடக்கும் போது ரயில் மணிக்கு 100 கி.மீ வேகமெடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. நீண்ட போராடத்த்துக்கு பின் காலை 9 மணிக்கு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஊஞ்சி பாசின் என்ற மேடான பகுதியில் தண்டவாளத்தில் மணல் மூட்டைகள் போட்டு ரயில் நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில் ரயில் 70 கிமீ தூரத்தை கடந்து விட்டது. ஓட்டுநர் இல்லாமல் ரயில் ஓடிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கூறிய வடக்கு ரயில்வே அதிகாரிகள்,‘‘70 கிமீ தூரம் டிரைவரின்றி ஓடிய ரயில் ஊஞ்சி பாசின் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதில், உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றனர். டிரைவர் ரயிலில் இருந்து இறங்கும் போது ஹேண்ட்பிரேக் போடாமல் இறங்கி விட்டதால் இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

The post காஷ்மீரில் இருந்து பஞ்சாப் வரை டிரைவர் இல்லாமல் ஓடிய சரக்கு ரயில்: மணிக்கு 100 கி.மீ வேகத்தில் சென்றதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Punjab ,Jammu ,Jammu and ,Jalandhar, Punjab ,Dinakaran ,
× RELATED காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், அரியானா...