×

வெள்ள நிவாரணம் கேட்டால் ஒன்றிய அமைச்சர் ஆணவமாக பேசுவது அழகல்ல ஒன்றிய அரசு ஒரு பைசா கூட வழங்கவில்லை:  முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ‘மழை, வெள்ளத்துக்கு நிவாரணம் கேட்டால் ஒன்றிய அமைச்சர் ஆணவமாக பேசுகிறார். மழை வெள்ள நிவாரணமாக தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு ஒரு பைசாகூட வழங்காத நிலையிலும் மக்களின் துயர் துடைப்பது திராவிட மாடல் அரசு’ என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். ழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் விழா தூத்துக்குடி அடுத்த புதுக்கோட்டை அருகேயுள்ள சூசைபாண்டியாபுரத்தில் நேற்று நடந்தது.

இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, மழை- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை, வீடு இடிந்தவர்களுக்கு புதிய வீடு கட்டுவதற்கான நிதியுதவி, மீனவர்களுக்கு புதிய படகுகள் வாங்குவதற்கு நிதியுதவி, மகளிர் மற்றும் சுய உதவி குழுவினருக்கும், சிறு வணிகர்களுக்கும் குறைந்த வட்டியில் கடன் உதவிகள் என சுமார் 15 ஆயிரம் பேருக்கு முதற்கட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பிறகு, மாவட்டந்தோறும் நலத்திட்ட உதவிகள் வழங்குகின்ற கூட்டங்களில் பங்கெடுத்து லட்சக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை நான் வழங்கி வருகிறேன். 2024ம் ஆண்டின், முதல் நலத்திட்ட உதவிகள் வழங்குகின்ற நிகழ்ச்சியை தென் மாவட்டங்களான இந்த தூத்துக்குடி – நெல்லையில் இருந்து துவங்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இதையெல்லாம் எதற்காக நான் சொல்கிறேன் என்றால், நாங்கள் எப்போதும் உங்களோடு இருப்பவர்கள்.

நலத்திட்ட உதவிகளையும், நிவாரண உதவிகளை வழங்குவதை கடமையாக அதை ஏற்றுக்கொண்டு அத்தோடு நின்றுவிடாது, உங்களுடைய வாழ்க்கை மேம்படவேண்டும், உங்கள் குழந்தைகளுக்கு நல்ல சம்பளத்துடன் நல்ல கம்பெனிகளில் வேலை கிடைக்கவேண்டும். அந்த நோக்கத்தோடு, பல பெரிய நிறுவனங்களில் இந்த பகுதிகளில் கொண்டு வந்து கொண்டிருக்கிறோம். இப்போதுகூட இங்கே இருக்கக்கூடிய சில்லாநத்தம் கிராமத்தில் ரூ,4000 கோடி முதலீட்டில் வின்ஃபாஸ்ட் என்ற மிகப் பெரிய கார் உற்பத்தி செய்கின்ற நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டிவிட்டுத்தான் நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்.

இந்த கம்பெனி தூத்துக்குடியில் மொத்தம் ரூ,16 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இருக்கிறது. அதுமட்டுமல்ல, நெல்லை கங்கை கொண்டான் சிப்காட் வளாகத்தில் டாடா பவர் நிறுவனம் ரூ,2800 கோடி முதலீட்டில் தொழிற்சாலை அமைத்திருக்கிறது. இதனால் அந்த பகுதியைச் சார்ந்த 1800 பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, சமீபத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையொப்பமிட்ட சிங்கப்பூர் நாட்டின் செம்கார்ப் என்ற நிறுவனம் ரூ,36,000 கோடி முதலீட்டிலும், மலேசியாவுடன் பெரிய தொழில் நிறுவனமான பெட்ரோநாஸ் என்ற நிறுவனம் ரூ,30,000 கோடி முதலீட்டிலும், தூத்துக்குடியில் தொழிற்சாலை அமைக்க இருக்கிறது.

இந்தத் தொழிற்சாலைகளுக்கான பணிகள் விரைவில் துவங்கவிருக்கிறது. இந்தத் தொழிற்சாலைகள் அமையும்போது, இந்தப் பகுதியைச் சார்ந்த ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கொரோனா பெருந்தொற்று வந்தபோது, திமுக. ஆட்சியில் இல்லை. ஆனால், ஒன்றிணைவோம் வா என்று வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எல்லா பொருட்களையும் வாங்கித் தந்தோம். பல ஊர்களில் உணவுக் கூடங்கள் வைத்து, உணவு வழங்கினோம்.

திமுக ஆட்சிக்கு வந்தபோதும், கொரோனா அலை இருந்தது. அப்போது குடும்ப அட்டைதாரர்கள் எல்லோருக்கும் ரூ,4 ஆயிரம் வழங்கினோம். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. கொரோனாவாக இருந்தாலும், வரலாறு காணாத புயல், வெள்ளமாக இருந்தாலும் மக்களுடைய துயரங்கள் தீர்த்து, அவர்களுடைய வாழ்வாதாரத்தை மறுகட்டமைப்பு செய்ய ஒவ்வொரு தரப்பு மக்களுக்கும் தேவையான திட்டங்களை நிறைவேற்றுவது தான் நம்முடைய திராவிட மாடல் அரசு.

இரண்டு மாபெரும் இயற்கை பேரிடர்களை கடந்த டிசம்பர் மாதம் சந்தித்தோம். இதனால், ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய ஒன்றிய அரசிடம் ரூ,37 ஆயிரம் கோடி நிதியை நாம் கேட்டோம். ஒன்றிய அரசிடம் இருந்து நிதி வரவில்லை என்பது மட்டும் இல்லை தேர்தல் வரப்போகிறதே வாக்கு கேட்டு தமிழ்நாட்டு மக்களை சந்திக்க வேண்டும் என்ற பயம் கொஞ்சம் கூட இல்லாமல் ஒன்றிய அரசும், நிதி அமைச்சரும் பாராமுகமாக இருக்கிறார்கள்.  நாம் இதை கேட்டால், உங்களிடம் சாதுரியம் இருந்தால் நீங்கள் சாதித்துக் கொள்ளலாமே’ என்று மிகவும் ஆணவமாக அவர் பேட்டி அளித்திருக்கிறார்.

இது அவர் வகிக்கின்ற பதவிக்கு அழகு அல்ல. எங்களிடம் சாதுரியம் இருப்பதால்தான் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிக் காட்டியிருக்கிறோம். உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள் பலவும் தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கு தமிழ்நாட்டை நோக்கி வருகிறார்கள். தமிழ்நாடு எல்லா துறைகளிலும் முதலிடத்தை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் திராவிட மாடல் அரசின் சாமர்த்தியம்தானே.

ஒன்றிய பாஜ அரசின் இடைக்காலத் தடைகளையும் தாண்டித்தான் இந்த வெற்றியை பெற்று வருகிறோம். எத்தகைய இடர் வந்தாலும், யாரையும் எதிர்பார்த்து காத்திருக்காமல், மக்கள் பணியாற்றும் ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி. உங்களுக்காக களத்தில் இருக்கின்ற ஆட்சிதான், திமுக. ஆட்சி. உங்கள் குடும்பங்களில் ஒருவனாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றும் இருப்பேன்…இருப்பேன்…இருப்பேன்’’ என்றார்.

*‘துரிதமாக நடந்த மீட்பு நடவடிக்கை’
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘இது என்னுடைய தங்கை கனிமொழியை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மாவட்டம். நாடாளுமன்றத்தில், கர்ஜனை மொழியாக செயல்பட்டு தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாப்பவர் மட்டுமில்லை, ஒட்டுமொத்த இந்தியாவுக்காகவும் குரல் கொடுப்பவர் அவர்.

தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்பு என்று தெரிந்ததும், உடனே இங்கே ஓடோடி வந்து மக்களை காப்பாற்றியதை பார்த்தோம். தங்கை கனிமொழியை போலவே, அமைச்சர்கள் மக்களோடு மக்களாக இருந்து காப்பாற்றினர். இப்படி உடனே மேற்கொள்ளப்பட்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளால்தான் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் அடிப்படை வசதிகள் விரைவாக சரி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர்’ என்றார்.

The post வெள்ள நிவாரணம் கேட்டால் ஒன்றிய அமைச்சர் ஆணவமாக பேசுவது அழகல்ல ஒன்றிய அரசு ஒரு பைசா கூட வழங்கவில்லை:  முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : EU ,minister ,EU government ,Mu K. Stalin ,Chennai ,Union minister ,Dravitha Model State ,Tamil Nadu ,K. ,Stalin ,PM ,K. Stalin ,Dinakaran ,
× RELATED விவசாயிகளின் விளைபொருளுக்கு நிலையான...