×

கடலோர காவல்படையில் திறன் வாய்ந்த நபர்கள் இணைய வேண்டும்: கிழக்கு ஐஜி டானி மைக்கேல் பேட்டி

சென்னை: கடலோர காவல்படையில் திறன் வாய்ந்த நபர்கள் இணைய வேண்டும் என கடலோர காவல்படையின் கிழக்கு ஐஜி டானி மைக்கேல் தெரிவித்துள்ளார். ந்திய கடலோர காவல்படையின் 48வது எழுச்சி தினத்தை முன்னிட்டு கடலோர காவல்படையின் பணிகளை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையிலான செய்முறை விளக்க சாகச நிகழ்ச்சி சென்னை துறைமுகத்தில் இருந்து 15 நாட்டிகல் மைல் தூரத்தில் உள்ள கடல் பகுதியில் நேற்று நடைபெற்றது.

இதில் 20க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் உள்பட 2,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். செய்முறை விளக்க நிகழ்ச்சியில் நடுக்கடலில் கப்பல் அல்லது படகு தீப்பிடித்தால் எப்படி தீயை அணைப்பது, தீப்பிடித்த கப்பலில் இருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் மக்களை மீட்பது, மீட்பு பணியின் போது அவசரகால தேவைக்கு உணவளிப்பது, மீனவர்கள் படகு சேதமடைந்து செயலிழக்கும் நிலையில் நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை காப்பாற்றுவது, கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால் எவ்வாறு அகற்றுவது உள்ளிட்டவை தொடர்பாக செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

இதுதவிர கடலில் ஆயுதங்கள், போதை பொருட்களை கடத்தும் கடற்கொள்ளையர்களை சுற்றிவளைத்து மடக்கி பிடிப்பது, ரோந்து பணிகளை மேற்கொள்ளுதல், எதிரிகளால் திடீர் தாக்குதல் ஏற்பட்டால் அவற்றை சமாளித்தல், துப்பாக்கி சூட்டின் மூலம் எதிர் தாக்குதல் நடத்துதல் ஆகியவற்றை குறித்து பிரமாண்டமாக எடுத்துரைக்கும் வகையில் கடலோர காவல்படை சார்பில் செய்முறை வடிவிலான சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த சாகசங்களில் கடலோர காவல்படையை சேர்ந்த 8 போர்க்கப்பல்கள், 2 டோனியர் விமானங்கள், 2 அதிவிரைவு ரோந்து படகுகள், 4 ஹெலிகாப்டர், ரப்பர் படகுகள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன.

இதுதொடர்பாக இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய ஐஜி டோனி மைக்கேல் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ன்பு கடலோர காவல்படையில் பணிபுரிவதற்காக அதிகமானோர் விண்ணப்பித்து வந்தனர். ஆனால் இன்றைக்கு இந்த பணியில் பணிபுரிவதற்கு பெரும்பாலானோர் விரும்புவதில்லை. தொழில்நுட்ப துறையையே இன்றைய இளைஞர்கள் அதிகம் நாடி செல்கின்றனர். கடலுக்குள் 8 மணி நேரம் கடினமானதாக இருந்தாலும் வேலை செய்தே ஆகவேண்டும் என்ற நிலை இருப்பதால் பலர் பணிக்கு வந்தும், விலகி சென்றுள்ளனர்.

கடலோர காவல் என்பது சவால்கள் நிறைந்த ஒரு சேவையாகும். கடல் மீதான ஈர்ப்பு கொண்டவர்களாலே நிலைத்து நிற்க முடிகிறது. ஒவ்வொரு முறையும் ஓர் உயிரை மீட்பது என்பது மிகவும் திருப்திகரமான நிம்மதியை தரும். ஆண்டுக்கு 200க்கும் மேற்பட்டோர் கடலோர காவல்படை காப்பாற்றி வருகிறது. இவற்றை எல்லாம் உணர்த்தும் வகையில் இதுபோன்ற சாகச நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம். கடலோர காவல் படையில் பணிபுரிந்தால் சாகசம் நிறைந்த வாழ்க்கை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

The post கடலோர காவல்படையில் திறன் வாய்ந்த நபர்கள் இணைய வேண்டும்: கிழக்கு ஐஜி டானி மைக்கேல் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Coast Guard ,East ,IG ,Danny Michael Petty ,CHENNAI ,Coast Guard East ,Danny Michael ,48th Independence Day ,Indian Coast Guard ,
× RELATED குஜராத் கடற்பகுதியில் சுமார் ரூ.600 கோடி...