×

மெரினாவில் 8.57 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்கள் இன்று திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

சென்னை: மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர்களான அண்ணா, கலைஞர் ஆகியோரின் நினைவிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறார். இதில், பங்கேற்க திமுக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். முக முன்னாள் தலைவரும், தமிழகத்தின் 5 முறை முதல்வராகவும் இருந்த கலைஞர் கடந்த 2018ம் ஆண்டு வயது முதிர்வு மற்றும் உடல் நிலை பாதிப்பு காரணமாக காலமானார். இதன்பின்னர், அவரது உடல் பல்வேறு சட்ட போராட்டத்திற்கு பிறகு, நீதிமன்றத்தின் உத்தரவின்படி மெரினாவில் உள்ள அண்ணாவின் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதனையடுத்து, தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் நவீன தமிழ்நாட்டின் சிற்பி என அழைக்கப்படும் கலைஞருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று 2021ம் ஆண்டு சட்டமன்றத்தில் அறிவித்தார். அதன்படி, கடந்த இரண்டு வருடங்களாக அண்ணாவின் நினைவிடத்தை புதுப்பித்தும், கலைஞர் நினைவிடமும் கட்டப்பட்டு வந்தன. தற்போது கட்டிட பணிகள் முழுவதுமாக நிறைவடைந்துள்ளதையடுத்து இன்று மாலை 7 மணிக்கு அண்ணா,கலைஞரின் நினைவிடம் முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்படவுள்ளது.

சுமார் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவிடத்தில் கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் கலைஞர் முத்திரை பதித்ததன் அடையாளமாக உதயசூரியன் போன்று முகப்பில் 3 வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கலைஞர் சதுக்கத்தின் கீழே நிலவறைப் பகுதியில், “கலைஞர் உலகம்” எனும் பெயரில் ஓர் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. தேபோல் ‘கலைஞரின் எழிலோவியங்கள்’ எனும் அறையில், அவரது இளமைக் காலம் முதல் வரலாற்றில் இடம் பெற்ற நிகழ்வுகள், படைப்புகள், போராட்டங்கள், நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

உரிமைப் போராளி கலைஞர், அரசியல் கலை அறிஞர் கலைஞர், சரித்திர நாயகனின் சாதனைப் பயணம் என தனித்தனி அறைகளில் கலைஞரின் பெருமை மற்றும் வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் புகைப்பட தொகுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நினைவிடத்தின் திறப்புவிழாவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* 150 சிறப்பு பஸ்கள், கூடுதல் ரயில் இயக்கம் துகாப்பு பணியில் 3,000 போலீசார்
கலைஞர் நினைவிடம் திறப்பு விழாவுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து 150 சிறப்பு பேருந்துகளை மாநகர போக்குவரத்து கழகம் இயக்குகிறது. அதேபோல், கூடுதல் ரயிலும் இன்று இயக்கப்பட உள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த விழாவுக்கு வரும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மேற்பார்வையில் தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் ஒரு இணை கமிஷனர், 3 துணை கமிஷனர்கள் கொண்ட 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மெரினா பகுதியில் போக்குவரத்து ெநரிசலை கட்டுப்படுத்த கூடுதல் கமிஷனர் சுதாகர் தலைமையில் 400 போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுகின்றனர்.

வாகனங்கள் நிறுத்தவும் மெரினாவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமராக்கள் மற்றும் டிரோன்கள் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

The post மெரினாவில் 8.57 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்கள் இன்று திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Chennai ,Chief Ministers ,Anna ,Kalainar ,Marina Beach ,DMK ,Mukha ,Chief Minister of Tamil Nadu ,Marina ,M.K.Stalin ,
× RELATED தமிழகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி...