×

கட்சியில் ஓரம் கட்டப்படும் பொன். ராதாகிருஷ்ணன் உள்பட பாஜ மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி: மாவட்ட, ஒன்றிய அளவிலும் புறக்கணிக்கப்படுவதால் விரக்தி

சென்னை: தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியில் பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட மூத்த தலைவர்கள் ஓரம் கட்டப்படுகின்றனர். இதனால் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மாவட்ட, ஒன்றிய அளவிலும் நிர்வாகிகள் புறக்கணிக்கப்படுவதால் அவர்கள் விரக்தியில் உள்ளனர். தமிழகத்தில் ஒரு காலத்தில் பாஜக, வடமாநிலத்தில் உள்ள ஒரு கட்சியாக தான் பார்க்கப்பட்டது. பாஜக என்ற கட்சி தமிழகத்தில் இருக்கிறதா? என்ற நிலை தான் இருந்து வந்தது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டார். அவர் தலைவராக நியமிக்கப்பட்டதும் தமிழகத்தில் பாஜக இருப்பது வெளியே தெரியவந்தது. அவர் தமிழகத்தில் பாஜகவை ஓரளவுக்கு வளர்த்தார். அவர் கவர்னராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டார்.

தமிழிசை போலவே அவர் கட்சியை வளர்க்க கடுமையாக உழைத்தார். அதன் பிறகு தான் தமிழகத்தில் பாஜக வேகமாக வளர தொடங்கியது. தொடர்ந்து அவர் மத்திய அமைச்சர் ஆனவுடன், தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். அவர் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டவுடன் பாஜகவில் கடும் எதிர்பார்ப்பு நிலவியது. அவர் கட்சியை வளர்த்து கொண்டு போய் விடுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அவர் கட்சியை வளர்ப்பதற்கு பதிலாக, கட்சியில் உள்ள மூத்த தலைவர்களை ஓரம் கட்டுவதில் தான் மும்முரமாக இருந்தார். குறிப்பாக பாஜக மூத்த தலைவர்களான இல.கணேசன், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரை ஓரம் கட்டினார். இதனால், மூத்த தலைவர்கள் அண்ணாமலை மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கவர்னர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. அவரும் கடும் கோபத்தில் தான் இருந்து வருகிறார். அதே நேரத்தில் அவர் தனக்கு கவர்னர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார். ஆனால், இதுவரை அவருக்கு கவர்னர் பதவி வழங்கப்படவில்லை.

அதே நேரத்தில் கட்சியில் இருக்கும் ஒரே மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மட்டும் தான். அவரும் வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் ஒன்றிய அமைச்சர் ஆகிவிடலாம் என்று எதிர்ப்பார்த்து காத்து இருந்து வருகிறார். கடந்த முறை அவர் தோற்றதால் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்காமல் போனது. அதனால், இந்த முறை எப்படியாவது அமைச்சராகி விடலாம் என்று இருந்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட மீண்டும் சீட் கிடைக்கும் என்ற ஆசையில் தேர்தலுக்கான வேலையை தொடங்கியுள்ளார்.

அதே நேரத்தில் கவர்னராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன் கன்னியாகுமரி அல்லது திருநெல்வேலி தொகுதி வேண்டும் என்று கூறி வருகிறார். மேலும் பால்கனகராஜ் கன்னியாகுமரியில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று சீட் கேட்டு வருகின்றார். அதே நேரத்தில் வடசென்னை தொகுதியை பால்கனகராஜுக்கு ஒதுக்க பாஜக முடிவு செய்துள்ளது. இதனால், கன்னியாகுமரி தொகுதியை யாருக்கு கொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி பாஜகவில் நேற்று இணைந்தார். அவருக்கு கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை வாக்குறுதி கொடுத்ததாக தெரிகிறது. இதனால்தான் விஜயதரணி பாஜகவில் இணைந்ததாக கூறப்படுகிறது. அவர் பாஜகவில் இணைந்ததுடன், தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார்.அவர் ராஜினாமா செய்துள்ளதால் விளவங்கோடு தொகுதி காலியானதாக ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுடன், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் தேர்தல் நடைபெறும் என்று கூறப்படுகிறது. விஜயதரணிக்கு சீட் உறுதியாகி விட்டதால் தான், விஜயதரணி பாஜகவில் இணைந்த நிகழ்ச்சியில் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் மட்டும் பங்கேற்றார் என்று கூறப்படுகிறது. இதனால், ஆண்டாண்டு காலம் கட்சிக்காக உழைத்து வந்த தனக்கு சீட் கிடைக்காதா? என்று பொன்.ராதாகிருஷ்ணன் ஏக்கத்தில் இருந்து வருகிறார். இதனால், அவர் அண்ணாமலை மீது கடும் அதிருப்தியிலும், கோபத்திலும் இருந்து வருகிறார்.

இதே போல பாஜக மூத்த தலைவர்களான வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம் போன்றவர்களும் ஓரம்கட்டப்படுவதாக தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். வானதி சீனிவாசன் பாஜக மகளிர் அணியில் தேசிய தலைவராக இருந்தாலும், தமிழகத்தில் தன்னை மதிப்பதில்லை என்றும் குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதே போல பாஜகவில் உள்ள வி.பி.துரைசாமியும் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இதே போல மாவட்டம், ஒன்றிய அளவில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்களும் தாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக, கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

அண்ணாமலை கட்சியை வளர்ப்பார் என்று பார்த்தால், தான் ஒருவர் தான் கட்சி என்பது போல செயல்பட்டு வருகிறாரே? என்று பாஜகவினர் கடும் ஆதங்கத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அண்ணாமலை மீதான கோபம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post கட்சியில் ஓரம் கட்டப்படும் பொன். ராதாகிருஷ்ணன் உள்பட பாஜ மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி: மாவட்ட, ஒன்றிய அளவிலும் புறக்கணிக்கப்படுவதால் விரக்தி appeared first on Dinakaran.

Tags : BJP ,Radhakrishnan ,Chennai ,Tamil Nadu ,Bharatiya Janata Party ,Pon Radhakrishnan ,Dinakaran ,
× RELATED சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன்?: புதிய தகவல்