×

கொளப்பாக்கம், கெருகம்பாக்கத்தில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி தலைமை செயலாளர் திடீர் ஆய்வு

குன்றத்தூர்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆண்டுதோறும் பெய்யும் பருவமழையின் காரணமாக செம்பரம்பாக்கம், போரூர் ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீரால் கொளப்பாக்கம், கெருகம்பாக்கம் ஆகிய பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், இந்த பகுதிகளில் கட்அண்ட் கவர் கால்வாய் அமைத்து நேரடியாக அடையாறு ஆற்றில் மழைநீர் கலக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணி துவங்கி நடைபெற்று வந்தது.

இந்த பணிகளை இன்று காலை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா திடீர் ஆய்வு செய்தார். பின்னர், கொளப்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் இருந்து அடையாறு ஆற்றில் நேரடியாக மழைநீர் கலக்கும் வகையில் கட் அண்ட் கவர் கால்வாய் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், கெருகம்பாக்கத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளையும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, பணிகள் எவ்வளவு முடிந்துள்ளது. இன்னும் பணி முழுவதும் முடிவடைய எத்தனை நாட்கள் ஆகும்? தற்போது இந்த பணிகள் முடிவடைந்தால் எந்தெந்த பகுதிகள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்படாமல் இருக்கும் போன்ற விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் திறந்த நிலையில் இருக்கும் மழைநீர் கால்வாய்கள் கொசுக்களின் பிறப்பிடமாக மாற வாய்ப்பு இருப்பதால் அவற்றின் மீது மூடிகள் அமைக்கவேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன், பொதுப்பணித்துறை உயரதிகாரிகள் உடனிருந்தனர்.

The post கொளப்பாக்கம், கெருகம்பாக்கத்தில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி தலைமை செயலாளர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kolpakkam, Kerugambakam ,Gunratur ,Kolpakkam ,Kerugambakkam ,Borur ,Chennai ,Kerugambakam ,Dinakaran ,
× RELATED வண்டலூர் அருகே தனியார் குடியிருப்பு...