×

நாளை(பிப்.26) கலைஞர் நினைவிடம் திறப்புவிழா; உயிரினும் மேலான உடன்பிறப்புகளான நீங்கள் கலந்து கொள்ள வேண்டும்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

சென்னை: நாளை(பிப்.26) நடைபெற உள்ள கலைஞர் நினைவிடம் திறப்புவிழாவிற்கு ‘உயிரினும் மேலான உடன்பிறப்புகளான நீங்கள் கலந்து கொள்ள வேண்டும்’ என தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் இதுகுறித்து முதல்வர் தெரிவித்துள்ளதாவது; “அலைகளின் தாலாட்டில்.. அண்ணனின் தலைமாட்டில்.. தலைவரின் நினைவிடம்!

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் அழைப்பு மடல்.

எத்தனையோ நிகழ்வுகளின்போது உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதியவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர். உங்களைப் போன்ற உணர்வுடன் அந்தக் கடிதங்களைப் படித்தவன்தான் உங்களில் ஒருவனான நான். இம்மண்ணை விட்டுச் சென்றாலும், நம் நெஞ்சில் நிறைந்துவிட்ட தலைவர் கலைஞர் தன் மரணத்திலும் போராளியாக – சுயமரியாதை வீரராகச் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றியுடன் பெற்ற சென்னை மெரினா கடற்கரையில் அவருக்குரிய இடத்தில், அவரது நினைவிடம் கலைத்திறனுடன் உருவாகியிருக்கிறது. பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெறவுள்ள அதன் திறப்புவிழாவுக்கு உடன்பிறப்புகளாம் உங்களை, உங்களில் ஒருவனான நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும், கழகத்தின் தலைவராகவும் வரவேற்கக் கடமைப்பட்டுள்ளேன்.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். காரணம், யானைதான் காட்டின் வளத்தைப் பெருக்கும். இயற்கையின் சமச்சீரான நிலையைத் தக்கவைக்கும். பல்லுயிர்ச் சூழலைப் பாதுகாக்கும். யானை வாழ்ந்ததற்கான அடையாளம் அது நடந்து சென்ற பாதை மட்டுமல்ல, அது உலா வந்த காட்டின் பசுமையும் செழுமையும்தான். தமிழ்நாட்டின் தாய் யானையாகத் திகழ்ந்தவர் தலைவர் கலைஞர். 95 ஆண்டுகாலம் வாழ்ந்தவர் 80 ஆண்டுகளுக்கு மேல் பொதுவாழ்க்கைக்காகத் தன்னை அர்ப்பணித்தார். இனம் காத்திடப் போராடினார். மொழிகாக்கச் சிறை சென்றார். மக்களின் மனங்களை வென்று 5 முறை முதலமைச்சர் ஆனார். இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத தலைவராக உயர்ந்தார். நவீனத் தமிழ்நாட்டைத் தன் சிந்தனை உளியால் செம்மையுறச் செதுக்கினார். எதிர்காலத் தலைமுறைக்கும் வாழ்வளிக்கும் திட்டங்களை வகுத்தளித்த பிறகே நிரந்தரமாக ஓய்வு கொண்டார்.

பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் பேரியக்கம், மக்கள் பக்கம் நின்றது. அவர்களின் மனங்களில் குடியேறியது. மாநிலத்தின் ஆட்சியைப் பிடித்தது. அந்த அண்ணா நம்மை விட்டு மறைந்த நிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சரானார் கலைஞர். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் தம்பி என்றவர் அண்ணா. அந்த அண்ணாவின் இதயத்தைக் இரவலாகக் கேட்டவர் தலைவர் கலைஞர்.

“நீ இருக்குமிடந்தேடி யான் வரும் வரையில்

இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா

நான் வரும்போது கையோடு கொணர்ந்து அதை

உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா”

-என்று இரங்கற்பாவில் இலக்கியம் படைத்தவர் கலைஞர். சொன்னதைச் செய்வோம். செய்வதைச் சொல்வோம் என்பதுதான் தலைவரின் அரசியல் இலக்கணம். சொன்னதுபோலவே, அவர் நிரந்தர ஓய்வெடுத்துக் கொண்டபோது, தன் அண்ணனின் அருகிலேயே உறக்கம் கொண்டார். இலக்கியமாய் நிலைத்துவிட்ட, ‘இரவல் கேட்ட இதயத்தை’யும் சொன்னது போலவே, அண்ணாவின் கால்மலரில் வைத்து வரலாற்றைப் படைத்தார்.

வங்கக் கடலோரம் தமிழ் அலைகள் தாலாட்ட 1969-இல் பேரறிஞர் அண்ணா நிரந்தர ஓய்வெடுக்கும்படி இடம் அமைத்துக் கொடுத்தவரே தலைவர் கலைஞர்தான். ஓங்கி உயர்ந்த தூணும், அணையா விளக்கும் கொண்ட அண்ணா சதுக்கத்தை அமைத்தவரும் அவர்தான். தன்னை அரசியல் களத்தில் ஆளாக்கிய அண்ணாவுக்கு மட்டுமல்ல, அரசியல் களங்களில் மற்போர் போல சொற்போர் நடத்தினாலும் தமிழருக்கேயுரிய பண்பாட்டுடனும் நாகரிகத்துடனும் மாற்று இயக்கத்தின் தலைவர்கள் மறைந்தபோதும் அவர்களுக்கு நினைவிடம் அமைத்த அரசியல் பண்பாளர் கலைஞர்.

மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் நினைவிடங்களை அமைத்தவர் கலைஞர்தான். எமர்ஜென்சி எனும் நெருக்கடிநிலைக் காலத்தில், 1975 அக்டோபர் 2-ஆம் நாள் காந்தி பிறந்தநாளன்று பெருந்தலைவர் காமராஜர் மரணமெய்திய போது, முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்களே மழையையும் சகதியையும் பொருட்படுத்தாமல், கிண்டியில் உள்ள இடத்திற்கு இரவு நேரத்தில் நேரில் சென்று, கார் விளக்கொளியில் ஆய்வு செய்து, அந்த இடத்தைத் தூய்மைப்படுத்தும் பணியை, தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு மேற்பார்வையிட்டு, அரசு மரியாதையுடன் பெருந்தலைவர் காமராசரின் உடலை எரியூட்டச் செய்து, அந்த இடத்தில் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் சின்னமான ராட்டைச் சின்னத்துடன் கூடிய நினைவிடத்தை அமைத்தவர் கலைஞர்.

இராமாயணத்தைச் சக்கரவர்த்தி திருமகன் என்ற பெயரில் எழுதியவர் மூதறிஞர் ராஜாஜி என்பதனால் அவரது நினைவிடத்தை இராமரின் பட்டாபிஷேக மகுடம் போல அமைத்தவரும் கலைஞர்தான். மாற்றுக் கருத்துடையவர்களேனும் அவர்தம் மனம் எதை விரும்பியதோ அதனையே நினைவிடத்தின் அடையாளமாக்கியவர் தலைவர் கலைஞர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவிடத்தில் முதன் முதலில் குடை போன்ற வடிவமைப்பை அமைத்தவரும் கலைஞரே. பலருக்கும் நிழல் தருபவராக எம்.ஜி.ஆர். இருந்தார் என்பதன் அடையாளம் அது.

தேர்தல் களத்துப் பகையை நெஞ்சில் கொள்ளாமல், தன் காலத்துத் தலைவர்களுக்கு, உரிய மரியாதையுடன் நினைவிடம் அமைத்த முத்தமிழறிஞர் கலைஞர், அவர் விரும்பியபடி கடற்கரையில் அண்ணாவின் அருகே ஓய்வெடுக்க அன்றைய ஆட்சியாளர்கள் அனுமதி தரவில்லை. தம்பிடி இடம் கூடத் தரமாட்டோம் எனக் காழ்ப்புணர்வைக் காட்டினார்கள். கழகத்தினர் மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ்நாடே கலைஞருக்குக் கடற்கரையில் இடம் ஒதுக்க வேண்டும் எனக் கண்ணீர்க் கோரிக்கை வைத்தது. இரக்கம் சுரக்கவில்லை ஆட்சியாளர்களுக்கு! இரத்தம் கொதித்தது உடன்பிறப்புகளுக்கு! சட்டப் போராட்டத்தைத் தொடங்கினோம். தந்தைக்கு மகன் செய்யும் கடமையாக நினைக்காமல், தலைவருக்குத் தொண்டன் செய்ய வேண்டிய கைம்மாறாக இதனை முன்னெடுத்தேன். விடிய விடிய நடந்த விசாரணைக்குப் பின், நண்பகல் பொழுதில் நல்ல தீர்ப்பு வந்தது. கடற்கரையில் இடம் ஒதுக்கித் தீர்ப்பளித்தனர் நீதியரசர்கள். தன் அண்ணனிடம் இரவலாகப் பெற்ற இதயத்தை ஒப்படைத்து, சொன்ன சொல் காத்த தம்பியானார் தலைவர் கலைஞர்.

‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்” என்று தலைவர் கலைஞரே எழுதித் தந்த தனக்கான கல்லறை வரிகளுடன் கடற்கரையில் அவர் ஓய்வு கொள்ளத் தொடங்கினார். அன்றாடம் ஆயிரமாயிரம் உடன்பிறப்புகள் அங்கே வந்து கண்ணீரைக் காணிக்கையாக்குவது வாடிக்கை. 2021 தேர்தலில் கழகம் பெற்ற வெற்றியை உயிர்நிகர் தலைவர் கலைஞரின் ஓய்விடத்தில்தான் உங்களில் ஒருவனான நானும் காணிக்கையாக்கினேன். தலைவரின் ஓய்விடத்தில் தங்களின் திருமணத்தை நடத்தி, புதுவாழ்வைத் தொடங்கிய வெற்றிகரமான இணையர்கள் உண்டு. பிறந்த குழந்தையைத் தலைவர் கலைஞரின் ஓய்விடத்தில் கிடத்தி, குடும்பத்தின் மூதாதையரை வணங்குவது போன்ற வணக்கத்தைச் செலுத்தியவர்கள் உண்டு. மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், விளிம்புநிலை மக்கள் எனத் தலைவர் கலைஞரின் ஆட்சித்திறனால் தங்கள் வாழ்வில் ஒளிபெற்றவர்களின் நன்றி செலுத்தும் இடமாக கலைஞரின் ஓய்விடம் அமைந்தது.

தமிழுக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழர்களின் உயர்வுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் ஓயாது உழைத்த தலைவர் கலைஞர் ஓய்வு கொள்ளும் இடத்தை ஒரு வரலாற்றுச் சின்னமாகக் கட்டியமைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் திராவிட மாடல் அரசு அதற்கான செயல்திட்டங்களை வகுத்தது. ஆறாவது முறையாக ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு தொடங்கிய இந்தப் பணி, தலைவர் கலைஞரின் ஆறாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வருவதற்கு முன்பாக நிறைவடைந்துள்ளது.

எதையும் தாங்கும் இதயத்துடன் பேரறிஞர் அண்ணா துயில் கொள்ளும் சதுக்கமும் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இரு பெரும் தலைவர்களால் நம் இனிய தமிழ்நாடு பெற்ற பயன்களை வாழும் தலைமுறையும், வருங்காலத் தலைமுறையும் அறிந்துகொள்ளும் வகையில் அறிவியல் தொழில்நுட்பத்துடன் இணைந்த வரலாற்றுச் சின்னமாக வடிவமைக்கப்பட்டுள்ளன பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் ஓய்வு கொள்ளும் இடங்கள். கலைஞரின் நினைவிடம் அருகே அமைக்கப்பட்டுள்ள நிலவறையில் பயணித்தால், கலைஞர் வாழ்ந்த காலத்தில் நாமும் பயணிப்பது போன்ற உணர்வு ஏற்படும். தலைவர் கலைஞருடனேயே பயணிப்பது போன்ற அனுபவம் கிடைக்கும். அவர் பெற்றுத் தந்த செம்மொழித் தகுதி, அவர் உருவாக்கிய கணினிப் புரட்சி, அவர் கட்டமைத்த நவீனத் தமிழ்நாடு, அவருடைய படைப்பாற்றல், அவரது நிர்வாகத்திறன், இந்தியத் தலைவர்களின் பாராட்டுதலைப் பெற்ற கலைஞரின் ஆளுமை உள்ளிட்ட அனைத்தும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியை நிறைவேற்ற அல்லும் பகலும் உழைத்த பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு எ.வ.வேலு அவர்களின் அர்ப்பணிப்புமிக்க உழைப்பையும், அவருக்கு உறுதுணையாக இருந்த அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறையினரின் ஒத்துழைப்பையும் மறக்க முடியாது. தமிழினத்தின் உயர்வுக்காக அயராது உழைத்த முத்தமிழறிஞர் கலைஞருக்காக இரவு – பகலாக உழைத்தும், தங்கத்தைப் போல இழைத்தும் கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது இந்த நினைவிடம்.

என்றென்றும் நெஞ்சில் வாழ்ந்து, நம்மை இயக்கக்கூடிய தலைவரின் ஓய்விடம் வியக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு, பிப்ரவரி 26-ஆம் நாள் திங்கட்கிழமை மாலை 7 மணியளவில் திறந்து வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு ஒளி தந்த ஞாயிறான நம் கலைஞரின் ஓய்விடம், திங்கள் மாலையில் திறந்து வைக்கப்படும் நிகழ்வில், அவரின் உயிரினும் மேலான உடன்பிறப்புகளாம் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என உங்களில் ஒருவனான நான் உரிமையுடனும் உள்ளன்புடனும் அழைக்கின்றேன்.

“எழுந்து வா.. எழுந்து வா..” என்று கோபாலபுரம் இல்லத்தின் முன்பும், காவிரி மருத்துவமனை அருகே உள்ள சாலைகளிலும் நின்று முழக்கமிட்ட உடன்பிறப்புகள் நீங்கள்தானே..! உங்களின் குரலை இப்போது கடல் அலைகள் அன்றாடம் முழக்கமிடுகின்றன. பேரறிஞர் அண்ணாவை எழுந்து வரச் சொன்னார் தலைவர் கலைஞர். அண்ணா வரவில்லை. கலைஞரை எழுந்து வரச் சொல்கின்றன அலைகள். அவரின் ஓய்வு நிறைவடையவில்லை. தன்னால் வர இயலாவிட்டாலும், தன் உடன்பிறப்புகள் நிச்சயம் வருவார்கள் என்பதைத் தலைவர் கலைஞர் அறிவார். தலைமுறைகள் கடந்த தலைவரான நம் கலைஞர், தமிழ் அலைகளின் தாலாட்டில், தன் அண்ணனின் தலைமாட்டில் ஓய்வெடுக்கிறார். அவரைக் காண வங்கக் கடலோரம் வருக உடன்பிறப்பே” என முதல்வர் தெரிவித்துள்ளார்.

The post நாளை(பிப்.26) கலைஞர் நினைவிடம் திறப்புவிழா; உயிரினும் மேலான உடன்பிறப்புகளான நீங்கள் கலந்து கொள்ள வேண்டும்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Chief of Volunteers ,Mu. K. Stalin ,Chennai ,Chief Minister of Volunteers ,K. Stalin ,Chief Minister ,wave of ,waves ,Artist Memorial Opening Ceremony ,Dinakaran ,
× RELATED கோடைகாலத்தில் குடிநீர் தேவையை கருதி...