×

புதுவையில் ஆன்லைனில் 9 பேரிடம் நூதன மோசடி

புதுச்சேரி, பிப். 25: புதுச்சேரியில் 9 பேரிடம் ஆன்லைன் மூலமாக மோசடி கும்பல் பணம் பறித்துள்ளது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியை சேர்ந்த ராஜேஷ் என்பவரிடம் தெரியாத நபர் தொடர்பு கொண்டு, தான் ஒரு ராணுவ அதிகாரி என கூறியுள்ளார். அப்போது, அந்த நபர் செங்கல், மணல், ஜல்லி விற்பனை செய்து வருவதாகவும், தன்னிடம் பணம் கொடுத்தால் இரட்டிப்பு லாபம் தருவதாகவும் கூறியுள்ளார். அதை நம்பி அவரும் ரூ.19 ஆயிரத்தை அனுப்பி ஏமாந்துள்ளார். சுகன்யா ஈஸ்வரி என்ற பெண் பேஸ்புக்கில் ஸ்கிராச் கார்டு தொடர்பான விளம்பரத்தை பார்த்துள்ளார். பின்னர், அதிலிருந்து இணைப்பு வழியாக உள் நுழைந்த போது, அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.2,997ஐ மோசடியாக எடுக்கப்பட்டுள்ளது. சித்தார்த் குமார் என்பவர் ரூ.19,360, பாலமுருகன் என்பவர் ரூ.1,996 ஜிபே மூலம் தவறுதலாக வேறு நபர்களுக்கு அனுப்பியுள்ளனர். கீர்த்தனா என்ற பெண் கடன் பெறும் செயலியில் ரூ.1,700 பெற்று, அதனை வட்டியுடன் செலுத்தியுள்ளார்.

அதன் பிறகு, தெரியாத நபர் ஒருவர் கீர்த்தனாவின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பி, மேலும் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். லோகசந்தர் என்பவர் ஆன்லைனில் உணவக உரிமத்தை புதுப்பிக்க ரூ.5 ஆயிரம் செலுத்தி ஏமாந்துள்ளார். விஜயகுமாரி என்ற பெண்ணிடம் தெரியாத நபர் தொடர்பு கொண்டு அவரது சகோதரர் போல் பேசி ரூ.7 ஆயிரம் பணம் பெற்றுள்ளார். அதன்பிறகு, அந்த நபர் ஆள்மாற்றம் செய்து பணம் பெற்றது தெரியவந்தது. உமர் பரூக் என்பவர் ஆன்லைனில் ரூ.6,300 செலுத்தி மிளகாய் ஆர்டர் செய்துள்ளார். பல நாள் கடந்த பிறகும் பொருள் வரவில்லை. அதன் பிறகு, அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்து போனது தெரியவந்தது. சுந்தர்ராஜன் என்பவரின் பேஸ்புக் கணக்கை மர்ம நபர் ஹேக் செய்து, அதில் தேவையில்லாத தகவல்களை பதிவிட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட 9 பேரும் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதுவையில் ஆன்லைனில் 9 பேரிடம் நூதன மோசடி appeared first on Dinakaran.

Tags : Puduvai ,Puducherry ,Rajesh ,
× RELATED பொருட்களுக்கு ரூ.6 லட்சம் அனுப்பியதாக...