×

விமானம் நடுவானில் பறந்தபோது மலேசிய பெண் பயணி திடீர் உயிரிழப்பு: புனித பயணம் சென்று திரும்பியபோது சோகம்

சென்னை: துபாயிலிருந்து மலேசியா சென்று கொண்டிருந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் பயணித்த பெண் பயணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னையில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. ஆனால் அதற்குள் பயணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று அதிகாலை 268 பயணிகளுடன் கோலாலம்பூர் நோக்கி புறப்பட்டது. இந்த விமானம் நேற்று காலை 10.30 மணிக்கு கோலாலம்பூரில் தரையிறங்க வேண்டும். இந்நிலையில், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அதில் பயணித்த மலேசியாவை சேர்ந்த பெண் பயணி ரஷிதா அகமத் (57) என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதனால் வலியால் துடித்தார். உடனடியாக விமான பணிப்பெண்கள், ரஷிதாவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்ததோடு அவசரமாக தலைமை விமானிக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தலைமை விமானி, ஏதாவது ஒரு விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்க முடிவு செய்தார். அப்போது விமானம் சென்னை வான்வெளியில் பறந்து கொண்டு இருப்பதை அறிந்த விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, மருத்துவ சிகிச்சைக்காக விமானத்தை சென்னையில் அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டார். உடனே சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், டெல்லியில் உள்ள தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அங்கிருந்து விமானத்தை உடனடியாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதித்ததோடு, தேவையான மருத்துவ உதவிகளையும் செய்து கொடுக்கும்படி உத்தரவிட்டனர்.

இதையடுத்து விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை அவசரமாக தரையிறங்கியது. சென்னை விமான நிலைய மருத்துவ குழுவினர் உடனடியாக விமானத்துக்குள் ஏறி ரஷிதா அகமத்தை பரிசோதித்தனர். ஆனால் அவர் தனது இருக்கையில் தலை சாய்ந்தபடி உயிரிழந்த நிலையில் இருந்தார். ரஷிதா அகமத், கடுமையான மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பெண் பயணியின் உடலை கீழே இறக்கினர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், அந்த பெண் பயணி சவுதி அரேபியா ஜெட்டா நகருக்கு புனித பயணமாக சென்று விட்டு, மீண்டும் மலேசியா நாட்டிற்கு திரும்பி சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது. மலேசிய நாட்டு தூதரக அதிகாரிகளுக்கு சென்னை விமான நிலைய போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இந்த விமானம் சுத்தப்படுத்தப்பட்ட பின்பு 2 மணி நேரம் தாமதமாக சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்றது.

The post விமானம் நடுவானில் பறந்தபோது மலேசிய பெண் பயணி திடீர் உயிரிழப்பு: புனித பயணம் சென்று திரும்பியபோது சோகம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dubai ,Malaysia ,Emirates ,
× RELATED மலேசியாவில் இருந்து தமிழக...